வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து தனக்கென தனித்துவமான அடையாளத்தை கொண்டிருக்கும் நடிகர் பசுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குற்றம் புரிந்தவன் :தி கில்டி ஒன்’ எனும் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த இணைய தொடர் சோனி லிவ் டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி முதல் ஒளிபரப்பாகிறது.
இயக்குநர் செல்வமணி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குற்றம் புரிந்தவன் : தி கில்டி ஒன்’ எனும் இணைய தொடரில் பசுபதி, விதார்த், லட்சுமி பிரியா சந்திர மௌலி மூணாறு ரமேஷ், பிரியதர்ஷினி ராஜ்குமார்,லிஸி அண்டனி, அஜித் கோஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஃபாரூக் ஜெ. பாஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். என். பிரசாத் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த இணையத் தொடரை ஹேப்பி யுனிகான் மற்றும் ஆக்புல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இணைய தொடர் குறித்து இயக்குநர் பேசுகையில், ” குற்றவுணர்விற்கும் , அப்பாவித்தனத்திற்கும் இடையே உள்ள வித்தியாசங்களை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்க கூடிய ஒரு உளவியல் பயணத்தை இந்த இணைய தொடர் பார்வையாளர்களுக்கு வழங்கும்.
கதையின் நாயகன் நல்ல நோக்கத்திற்காக செய்த செயல்கள் அவருக்கே எதிர்பாராத வகையில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் போது மறைக்கப்பட்ட மர்மங்கள் வெளிப்பட தொடங்குகின்றன. இது பார்வையாளர்களுக்கு அற்புதமான அனுபவத்தை வழங்கும்” என்றார்.
ஏழு அத்தியாயங்களை கொண்ட இந்த ‘குற்றம் புரிந்தவன் :தி கில்டி ஒன்’ எனும் இணைய தொடர் சோனி லிவ் டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி முதல் வெளியாகிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் முன்னோட்டத்தில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் கதையின் நாயகனான பசுபதியின் உடல் மொழி மற்றும் நடிப்புத் திறனை நுட்பமாக வெளிப்படுத்துவதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.