ஐரோப்பாவின் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயற்சிப்பது தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது.
கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவில்லாமல் உக்ரைன் – ரஷியா போர் நீடித்து வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்ட இந்த போர் உக்ரைனில் மிகப்பெரிய அளவிலான மக்களின் இடப்பெயர்ச்சிக்கும் வழிவகுத்தது.
ரஷியாவுக்கு எதிரான பொருளாதர தடைகளை விதித்து உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவி வருகின்றன. ரஷியாவுக்கு சீனா, வட கொரியா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன. போர் நிறுத்தம் தொடர்பாக பலமுறை நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்தன.
குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ ரஷிய அதிபர் புதின் கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்கா சென்று நேரில் சந்தித்து பேசியும் எந்த பயனும் இல்லை. புதின் போரை தேவையில்லாமல் நீட்டித்து வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
இன்று அதிபர் டிரம்ப்-ஐ ஜெலன்ஸ்கி நேரில் சந்திக்க உள்ள நிலையில் முன்னதாக புதின், டிரம்புடன் போனில் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய டிரம்ப், தானும் புதினும் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் நகரில் விரைவில் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.
இதற்கிடையே இன்றைய சந்திப்பில் டிரம்ப் இடம் தங்களுக்கு நீண்டதூரம் பாய்ந்து தாக்கும் Tomahawk ஆயுதங்களை வழங்குமாறு ஜெலன்ஸ்கி வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், ரஷிய அதிபர் புதினும் நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷிய அதிபர் புதினும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் நேருக்கு நேர் சந்தித்து போரை முடிவுக்கு கொண்டுவருவத்து குறித்து விவாதிப்பார்களா என்ற கேள்விக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பு செயலாளர் கரோலின் லெவிட், “அது சாத்தியமானது தான் என்று அதிபர் டிரம்ப் நினைக்கிறார். அவ்வாறு நடப்பதை அவர் நிச்சயம் விரும்புவார்” என்று தெரிவித்தார்.
maalaimalar