களுவாஞ்சிக்குடி நீதிமன்றக் களஞ்சியசாலைப் பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் நீதிவான் ஜே.பீ.ஏ. ரஞ்சித்குமாரை எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுச் சொத்துகளைக் கையாடல் செய்தமை தொடர்பான இந்த வழக்கு, நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, முன்னாள் நீதிவான் ஜே.பீ.ஏ. ரஞ்சித்குமார் ‘நகர்த்தல் மனு’ ஒன்றின் ஊடாக நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தார்.
களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதிவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிவான் பின்வருமாறு தெரிவித்தார்:
“இந்த வழக்கினை வருங்காலங்களில் புதிய நீதிவான் ஒருவரின் ஊடாக நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக நீதிச்சேவை ஆணைக்குழுவின் ஆலோசனையைப் பெற்று, புதிய நீதிவான் ஒருவர் பரிந்துரைக்கப்படுவார். அதன் பின்னரே, புதிய நீதிவான் முன்னிலையில் பிணைக் கோரிக்கையை விண்ணப்பிக்க முடியும்.”
இவ்வாறு குறிப்பிட்ட நீதிவான் தர்மலிங்கம் பிரதீபன், சந்தேகநபராக முன்னிலையான ஜே.பீ.ஏ. ரஞ்சித்குமாரை மே 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், தான் இவ்வழக்கிலிருந்து விலகிக்கொள்வதாகவும் திறந்த மன்றில் அறிவித்தார்.
பின்னணி: கடந்த காலங்களில் களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதிவானாகப் பணியாற்றிய ஜே.பீ.ஏ. ரஞ்சித்குமார், தனது பதவிக்காலத்தில் நீதிமன்றக் களஞ்சியசாலையிலிருந்த சான்றுப் பொருட்களை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. பொதுச் சொத்துகளைக் கையாடல் செய்தமை தொடர்பான இவ்வழக்கில் அங்கு கடமையாற்றிய பதில் பதிவாளரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில், நீதிச்சேவை ஆணைக்குழு கடந்த 2026.01.02ஆம் திகதியன்று, சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானாகப் பணியாற்றி வந்த ஜே.பீ.ஏ. ரஞ்சித்குமாரைப் பணியிடை நீக்கம் செய்து இடமாற்றம் செய்திருந்தது. இந்நிலையில், அவர் இன்று நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் திருமணம் செய்துள்ளதோடு களுவாஞ்சிக்குடி, சம்மாந்துறை உள்ளிட்ட நீதிமன்றங்களில் நீதிவானாகக் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.