இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் நான்கு பதவிகளுக்கான நிலுவையில் உள்ள நியமனங்களை வழங்க வேண்டாம் என வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதம் எழுதியுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில் மேலும்,
இந்த அலுவலுவகம் உத்தேசமாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி உள்நாட்டுப் போர் முடிந்த பின்னர் இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் ஒரு பொறிமுறை எனப் பொதுவாகக் கூறப்படுகின்றது.
பெரும்பாலும் நாட்டின் பாதுகாப்புப் படைகள் மேற்கொண்ட மீறல்களுக்கு ஈடுசெய்யும் வகையில் இழப்பீடுகள் வழங்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. தமிழ் மக்கள் எந்தவொரு உள்ளகப் பொறுப்புக்கூறல் பொறிமுறையையும் அல்லது நல்லிணக்கத்தையும் நிராகரித்து வருகின்றனர்.
ஏனெனில், இந்த நிறுவனங்களின் நியாயமான செயற்பாட்டிலோ சுயாதீனத்தன்மையிலோ அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்தச் சூழ்நிலையில்தான் மேலே குறிப்பிடப்பட்ட அலுவகத்தைச் சார்ந்த மிகவும் கரிசனைக்குரிய ஒரு பிரச்சினையைச் சுட்டிக்காட்ட இந்தக் கடிதம் எழுதப்படுகின்றது.
பாதுகாப்புத் துறை பின்னணி கொண்ட எந்தவொரு நபரும் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவதால், எங்கள் மக்கள் இத்தனை நாட்களாகக் கூறி வந்ததும், அரசின் மனப்பான்மையையும் உறுதிப்படுத்தும் நிலை உருவாகும். சமீபத்தில் இழப்பீடு செய்யும் அலுவகத்துக்கு நான்கு பெயர்கள் நியமனத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது.
இதில் இருவர் பாதுகாப்புத் துறை பின்னணி கொண்டவர்கள். இதற்கு மேலாக, ஐந்தாவது உறுப்பினர் மேஜர் ஜெனரல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே, வசந்தா பெரேரா (முன்னர் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்) மற்றும் ஜோசப் டெரன்ஸ் ஞானநந்தன் சுந்தரம் ஆகியோர் நியமிக்கப்படின், ஐந்து உறுப்பினர்களில் மூவர் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்களாக இருப்பர். இத்தகைய அலுவகத்திற்கு ஒருவரும் அந்தத் துறையில் இருந்து வரக்கூடாது என்பது எங்கள் நிலைப்பாடு.
2025 நவம்பர் 5 அன்று வவுனியாவில் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு ஒருமனதாக தீர்மானித்து, தங்களுக்கு வசந்தா பெரேரா மற்றும் ஜோசப் டெரன்ஸ் ஞானநந்தன் சுந்தரம் ஆகியோரையும் இழப்பீடு செய்யும் அலுவகத்திற்கு நியமிக்க வேண்டாம் என்று வலியுறுத்தி எழுத ஒருமனதாக தீர்மானம் மேற்கொண்டுள்ளோம் – எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.