மஹாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் எனப்படும், 100 நாள் வேலை திட்டத்தில், மாநில அளவில் ஏற்படும் நிர்வாக தாமதங்களால் தொழிலாளர்களுக்கு 1,340 கோடி ரூபாய் ஊதியம் நிலுவையில் உள்ளதாக மத்திய ஊரக அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மட்டும், 88.66 லட்சம் தொழிலாளர்களுக்கு, 220 கோடி ரூபாய் தராமல் பாக்கி வைத்துள்ளது மாநில அரசு.
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கிராமப்புறங்களில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
ஒதுக்கீடு நடப்பு 2025 – -26 நிதியாண்டில் இத்திட்டத்துக்கு மத்திய அரசு 86,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. அதில் நவம்பர் இறுதி வரை 68,000 கோடி ரூபாய் அளவுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பல்வேறு மாநிலங்கள் இதுவரை 1,340 கோடி ரூபாய் அளவுக்கு தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளன.
அதில், ஆந்திரா, கேரளா, தமிழகம், மத்திய பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்கள் மட்டும் 1,095 கோடி ரூபாய் சம்பள பாக்கி வைத்துள்ளன.
இந்தாண்டு டிசம்பர் 1ம் தேதி நிலவரப்படி, மஹாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் நாட்டில் மொத்தம் 27.64 கோடி தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 12.16 கோடி பேர் வேலை பெறுகின்றனர்.
தாமதம் ஆந்திராவில் 90.54 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு சம்பள பாக்கி நாட்டிலேயே மிக அதிகமாக 402 கோடி ரூபாயாக உள்ளது. கேரளாவில் 22.63 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். சம்பள பாக்கி, 340 கோடி ரூபாய்.
தமிழகத்தில் 88.66 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு சம்பள பாக்கி 220 கோடி ரூபாயாக உள்ளது. மத்திய பிரதேசத்தில் 1 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். சம்பள பாக்கி 131 கோடி ரூபாயாக உள்ளது.
மத்திய அரசு உரிய நேரத்தில் நிதி ஒதுக்கினாலும், மாநிலங்கள் தொழிலாளர்களின் வருகை பதிவேட்டை தாமதமாக இணையதளத்தில் பதிவேற்றுவது, பிழைகள் போன்ற நிர்வாக தாமதங்களால் இந்த சம்பள பாக்கி சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் 1.18 கோடி 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் உள்ளனர். ராஜஸ்தானில் 1.16 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால், இந்த மாநிலங்களில் சம்பள பாக்கி முறையே 33 கோடி ரூபாய் மற்றும் 5 கோடி ரூபாய் என குறைந்த அளவிலேயே உள்ளதை புள்ளிவிபரங்கள் சுட்டிக் காட் டுகின்றன.