ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ பெற்றதாகக் கூறப்படும் பணத்தை பிச்சைக்காரருக்கு பணம் கொடுப்பதோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஒப்பிட்டதை, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹெரத் நிராகரித்துள்ளார்.
அரசியல் ரீதியான ஒரு விவகாரம் தொடர்பாக பெருந்தொகையான பணத்தைப் பெற்றுக்கொள்வதை பிச்சைக்காரருக்கு பணம் கொடுப்பதோடு ஒப்பிட முடியாது என அமைச்சர் ஹெரத் தெரிவித்தார்.
“அப்படிப் பார்த்தால் நாமல் ராஜபக்ஷ ஒரு பிச்சைக்காரராகத் தான் இருக்க வேண்டும்,” என்று கூறிய ஹெரத், இத்தகைய ஒப்பீட்டை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் சேர்த்துக் கொண்டார்.
ஒரு பிச்சைக்காரருக்கு பணம் கொடுப்பதற்கும் ஒரு அரசியல்வாதிக்கு பணம் கொடுப்பதற்கும் இடையே தெளிவான வித்தியாசம் உள்ளது என்று அவர் கூறினார்.
“அரசியல்வாதிகள் எவ்வாறு பணம் சம்பாதித்தார்கள் என்பதை இந்த நாட்டில் உள்ள எவரும் புரிந்துகொள்வார்கள். இந்தச் சம்பவத்தை ஒரு பிச்சைக்காரருக்கு பணம் கொடுப்பதோடு கம்மன்பில ஒப்பிடுகிறார் என்றால், அந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் பகுத்தறிவை தான் கேள்விக்குட்படுத்த வேண்டும்,” என்றார்.
ஊழல் மற்றும் மோசடிகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இளைய தலைமுறையினர் ஆதரவாக உள்ளதாக ஹெரத் தெரிவித்தார்.
“மோசடி செய்பவர்களிடமிருந்து நாட்டை விடுவிப்பதற்காகவே ஜென் இசட் (Gen Z) தலைமுறையினர் ‘அரகலய’ (போராட்டத்தை) தொடங்கினர். இப்போது நாட்டில் ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை ஜென் இசட் தலைமுறையினருக்கு வந்துள்ளது,” என்றார்.
மேலும், நாமல் ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு தற்போதைய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது அல்ல என்றும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியின் போதே தாக்கல் செய்யப்பட்டது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, அண்மையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, தொழிலதிபர் நிமால் பெரேராவினால் நாமல் ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பணம் எவ்வாறு தானாகவே கமிஷன் தொகையாகக் கருதப்படும் என கேள்வி எழுப்பினார்.
“நிமால் பெரேரா நாமலுக்கு 800,000 அமெரிக்க டொலர்களைக் கொடுத்தார் என்று வைத்துக்கொள்வோம். அது எப்படி கமிஷனாகும்?” என நாமல் ராஜபக்ஷவின் கைது மற்றும் அதைத் தொடர்ந்த விளக்கமறியல் குறித்து கம்மன்பில கேள்வி எழுப்பியிருந்தார்.
நன்கொடைகளைப் பெற்றுக்கொள்வது சட்டவிரோதமானது எனக் கருதப்பட்டால், வீதியில் செல்லும் ஒரு பிச்சைக்காரர் நன்கொடையைப் பெறுவதற்குக் கூட சட்டரீதியான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் வாதிட்டிருந்தார்.