வங்குரோத்து அடைந்திருந்த நாட்டை மீட்டு, வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆவார். அதனால் நாட்டை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்ல முடியுமான பாதை அவருக்கே தெரியும். அதனால் நாட்டின் அபிவிருத்திக்காக ரணில் விக்ரமசிங்கவை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாடு வங்குராேத்து அடைந்து பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பத்தில், அந்த நிலைமையில் இருந்து நாட்டை மீட்டு, முன்னோக்கி கொண்டு சென்ற தலைவர் ரணில் விக்ரமசிங்கவாகும். அதனால் நாட்டை கொண்டுசெல்ல வேண்டிய பாதையை நன்கு அறிந்தவர் ரணில் விக்ரமசிங்கவாகும்.
50 வருட அரசியல் அனுபவமுள்ள தலைவரான ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்துக்கு செல்வது தொடர்பில் இதுவரை கலந்துரையாடப்படவில்லை. தற்போதைக்கு அது அவசியமில்லை என்றே நினைக்கிறேன்.
அத்துடன் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி ஒன்றை கட்டியெழுப்புவதன் நோக்கம், பொதுவான இணக்கப்பாட்டுக்காக அனைவரும் ஒன்றாக அமர்வதாகும் அவ்வாறு அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்த பின்னர, இணைந்துகொண்டுள்ள அணிக்கு பாதுகாப்பு வழங்க முடியுமான நபர் யார் என்பதை அந்த அணி தீர்மானிக்க வேண்டும். அடிவாங்காமல் அரசியல் செய்ய முடியுமான நபர் யார் என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றார்.