தியாக தீபம் திலீபனுக்கு நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் வெண்கல உருவ சிலை வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தியாக தீபத்தின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
மலர் தூவி அஞ்சலி
அதன் போது , நினைவிடத்தில் தியாக தீபத்தின் வெண்கல உருவ சிலை வைக்கப்பட்டு , உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து , மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேவேளை , தியாக தீபம் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நல்லூர் வடக்கு வீதியிலும் சம நேரத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக்கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனுடைய 39ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனது மக்கள் தொடர்பகத்தில் இன்று(15) உணர்வெழுச்சியுடன் குறித்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
அந்தவகையில் அகவணக்கம் செலுத்தப்பட்டதையடுத்து தியாகதீபம் திலீபனின் உருவப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுடரேற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் உறுப்பினர் மகாதேவா குணசிங்கராவினால் தியாகதீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
அதனையடுத்து குறித்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றிருந்தவர்களால் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்தூவி உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் குறித்த நினைவேந்தல் நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், சமூகசெயற்பாட்டாளர் மணிவண்ணன் நிறோஜன், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.