நகைச்சுவை நடிகராக பிரபலமாகி கதையின் நாயகனாக உயர்ந்திருக்கும் நடிகர் சதீஷ் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் ‘முஸ்தபா முஸ்தபா’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இசையமைப்பாளர் டி. இமான்- இயக்குநர்கள் ராஜு முருகன் – வெங்கட் பிரபு ஆகியோர் இணைந்து அவர்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
இயக்குநர் பிரவீண் சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘முஸ்தபா முஸ்தபா’ எனும் திரைப்படத்தில் சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா, மானசா சவுத்ரி, ஐஸ்வர்யா தத்தா, கருணாகரன், புகழ், பவெல் நவகீதன், பார்வதி சரண், ஜாவா சுந்தரேசன், மகேஸ்வரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எஸ். விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம் எஸ் ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை த மாபோகோஸ் கம்பனி சார்பில் தயாரிப்பாளர் பிரதீப் மகாதேவன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படக்குழுவினர் படத்தின் டைட்டிலையும், ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளனர். இதில் சமூக வலைதளங்கள் மூலமாக நடைபெறும் மோசடிகளை மையப்படுத்திய படைப்பு என்பது தெரிய வருவதால்… ரசிகர்களிடத்தில் படத்தைப் பற்றிய நல்லதொரு அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கிறது.