மனிதராக பிறந்து மகானாக வாழ்ந்து கொண்டிருக்கும் புட்டபர்த்தி சாய்பாபா நிகழ்த்திய அற்புதங்களை மையப்படுத்தி சமூக பக்தி திரைப்படமாக உருவாகி இருக்கும் ‘அனந்தா’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அனந்தா’ எனும் திரைப்படத்தில் ஜெகபதி பாபு, சுகாசினி மணிரத்னம், வை. ஜி. மகேந்திரன், ‘நிழல்கள்’ ரவி, ‘தலைவாசல்’ விஜய், அபிராமி வெங்கடாசலம், ஸ்ரீ ரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. எல். சஞ்சய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘தேனிசை தென்றல்’ தேவா இசையமைத்திருக்கிறார். சாய்பாபாவின் இறைநிலை புகழை உரக்க உச்சரிக்கும் இந்த திரைப்படத்தை இன்னர் வியூ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரித்திருக்கிறார்.
விரைவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, இயக்குநர் லிங்குசாமி, பாடகர் மனோ, நடிகர் சித்ரா லட்சுமணன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
தயாரிப்பாளர் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ” 150 நாடுகளுக்கும் மேலாக வசிக்கும் மக்கள் சாய் பாபாவை வணங்குகிறார்கள். இந்த படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து இந்தத் தருணம் வரை என் வாழ்வில் எனக்கு கிடைத்த அதிசயமாக தான் பார்க்கிறேன். ஒவ்வொரு விடயங்களையும் பாபா தான் நிகழ்த்துகிறார். அவருடைய பக்தர்களுக்கு இந்தப் படம் நல்லதொரு புரிதலை ஏற்படுத்தும். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு இந்தப் படம் சிறந்த பதிலாகவும் இருக்கும். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி” என்றார்.