தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்து பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பராாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு முன்மொழிவுகளை சமர்ப்பிக்க அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் ஆரம்பகட்ட கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளது.
பத்தாவது பாராளுமன்றத்திற்கான “தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகள் மற்றும் விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்காக, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைவான பாராளுமன்ற விசேட குழுவிற்கு பொது மக்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் கோரப்பட்டிருக்கின்றன.
இந்த பின்னனியில், இதன் நோக்கங்களை முஸ்லிம் சமூக அரசியல் நோக்கில் விரிவாக ஆராய்ந்து விதப்புரைகளை வழங்க வேண்டிய தேவையும், கொள்கை வகுப்பாளர்களின் இறுதி முடிவு நோக்கு நிலைகள் வடிவம் பெறும் பின்னனி தேடல்கள் எவ்வாறு அமையப்போகின்றன மற்றும் இது சார்ந்த ஏனைய விடயங்களை ஆராயும் நோக்கில் துறைசார் நிபுணர்களுடனான முதற்கட்ட கலந்துரையாடல் ஒன்றை அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் தலைவர் ஷாம் நவாஸ் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப கட்ட கலந்துரையாடலில், இலங்கை தேர்தல் திணைக்களத்தின் முன்னாள் பிரதி தேர்தல்கள் ஆணையாளரும், தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான எம்.எம். மொஹமட், அரசியலமைப்புப் பேரவையின் முன்னாள் உறுப்பினரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜாவிட் யூசுப், சிரேஷ்ட சட்டத்தரணியும் மனித உரிமை ஆர்வலருமான ருஷ்தி ஹபீப், கொழும்பு பல்கலைக்கழ சட்ட பீட சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம்.ஹகீம், சிரேஷ்ட சட்டத்தரணி யூசுப், பாராளுமன்றத்தின் சிரேஷ்ட ஆய்வாளரும் கொள்கை மதிப்பீட்டாளருமான அஜ்வதீன், லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தின் முன்னாள் ஆய்வாளரும், அரசியல் தொடர்பாடல் நிபுணருமான ஏ.ஜீ.நளீர் அஹமட் ஆகியோர் பங்கேற்று தமது அவதானிப்புகளை முன்வைத்து கருத்து பரிமாற்றங்களில் ஈடுபட்டனர்.
முஸ்லிம் அரசியல் தரப்புகளைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், தேர்தல்கள் தொடர்பான நிபுணர்கள், கொள்கை ஆய்வாளர்கள், கொள்கை ஒப்பீட்டாளர்கள், முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கிட்டிய காலத்தில் அடுத்த கட்ட இக்கலந்துரையாடலை நடத்தி இறுதி தீர்மானத்தை எட்டுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.