அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இப்போதே தயாராகி வருகின்றது என்று அக்கட்சியின் உப தலைவர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
தற்போதைய நிலையில் அவசரமாக ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
முதலில் கட்சியை அடிமட்டத்திலிருந்து பலப்படுத்துவதே தமது முதன்மை இலக்கு எனவும், அதற்கான விசேட வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் சமரை மிகவும் வலுவான முறையில் எதிர்கொள்வதற்குக் கட்சி தயாராகி வருகின்றது நாம் நிச்சயம் அந்தச் சமரை எதிர்கொள்வோம் என்றும் விஜயதாஸ ராஜபக்ஷ நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் கட்சியில் ஏற்பட்ட உட்பூசல்கள் மற்றும் அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் ஒரு பலமான சக்தியாக மாற்றும் முயற்சியில் அதன் தலைமைகள் ஈடுபட்டுள்ளமையை விஜயதாஸவின் இந்தக் கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.