‘இட்லி கடை’ எனும் திரைப்படத்தின் பிரம்மாண்டமான வரவேற்பிற்கு பிறகு முன்னணி பான் இந்திய நட்சத்திர நடிகரான தனுஷ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தேரே இஷ்க் மே’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆனந்த எல். ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தேரே இஷ்க் மே’ எனும் திரைப்படத்தில் தனுஷ், கீர்த்தி சனோன், சுசில் தஹியா, மாஹீர் முஹிதீன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். துஷார் கான்ட்டி ராய் மற்றும் விஷால் சின்ஹா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்திய இந்தத் திரைப்படத்தை டி சீரிஸ் மற்றும் கலர் யெல்லோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் 28 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ் -தெலுங்கு- இந்தி -ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா மும்பையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த முன்னோட்டத்தில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் காதல் – காதலர்கள் – பிரிவு – திசை மாறிய பயணம் என ஒவ்வொரு காதலர்களின் வலியும் , மறையாத வடுவுடன் கூடிய உணர்வும் மிகுந்த காதலும் நேர்த்தியாக விவரிக்கப்பட்டிருப்பதால்… ரசிகர்களிடத்தில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இதனிடையே தனுஷ் நடிப்பில் வெளியாகி வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியைப் பெற்ற ‘ராஞ்சனா’ எனும் இந்தி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் இப்படம் உருவாகி இருப்பதால்.. திரையுலக வணிகர்களிடமும் இப்படத்தைப் பற்றிய நம்பிக்கையான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.