அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தெற்காசியாவிற்கான நிர்வாகத்தின் அணுகுமுறை குறித்து விவாதிக்க எனக்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி என அமெரிக்காவின் வெளியுறவு உதவி செயலாளர் (தெற்காசிய மற்றும் மத்திய ஆசியா) போல் கபூர் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு கொள்கையானது, நாம் ‘அமெரிக்காவிற்கே முதலிடம்’ வழங்க வேண்டும் என்பது ஆகும்.
இது தெற்காசியாவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களை மேம்படுத்தியுள்ளதுடன் எமது பங்காளிகளுக்கும் உதவியுள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் எனது பணியகத்தின் பணிகளில் இதன் பலன்களை நான் ஒவ்வொரு நாளும் காண்கிறேன்.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மாலைத்தீவு, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய தெற்காசிய பிராந்தியம் மிகவும் முக்கியமானது.
அமெரிக்காவிற்கே முதலிடம்’ என்பது ‘அமெரிக்கா மட்டும்’ என்று பொருள்படாது. எமது இலக்குகளை அடைய, சுமையை பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒத்த எண்ணம் கொண்ட பங்காளிகளுடன் நாம் ஒத்துழைக்க வேண்டும்.
கடந்த வாரம், ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தகக் கட்டமைப்பில் உடன்பாட்டை எட்டினர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, ட்ரம்ப் நிர்வாகம் பங்களாதேஷுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது 175 மில்லியன் மக்களைக் கொண்ட பங்களாதேஷின் சந்தையை அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்குத் திறந்துவிட்டுள்ளது.
வர்த்தகத்திற்கு அப்பாற்பட்டு, ட்ரம்ப் நிர்வாகம் மூலோபாய திறன் மேம்பாட்டிற்காக மூன்று பரந்த அணுகுமுறைகளைக் கையாண்டு வருகின்றது.அவை பாதுகாப்பு ஒத்துழைப்பு, இலக்கு வைக்கப்பட்ட முதலீடு மற்றும் இராஜதந்திரம் ஆகும்.
அமெரிக்காவிற்கும் தெற்காசியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பைப் பற்றி நான் இதுவரை விவாதித்தேன்.
ஆனால் மற்றொரு முக்கியமான ஒத்துழைப்பைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதாவது இந்தப் பிரச்சினைகளில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பு.
தெற்காசியாவின் முக்கியத்துவத்தை நாம் இருவருமே அங்கீகரிக்கிறோம். பிராந்தியத்தில் மூலோபாயத் திறனை வளர்ப்பதற்கு ஒன்றிணைந்து செயல்படுவோம். எமது பங்காளிகள் தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்ள உதவுவதன் மூலம் அமெரிக்காவைப் பாதுகாப்பாகவும், வலிமையாகவும், வளமாகவும் மாற்றுவோம் என அமெரிக்காவின் வெளியுறவு உதவி செயலாளர் (தெற்காசிய மற்றும் மத்திய ஆசியா) போல் கபூர் தெரிவித்துள்ளார்.