டொராண்டோ, ஜூலை 23: கனடாவின் டொராண்டோ நகரில் 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்களின் போது இஸ்ரேலிய மற்றும் யூத சமூகத்தினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட 33 வயதுடைய நபர் ஒருவர், பயங்கரவாதச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
2024 மே 25 மற்றும் செப்டம்பர் 7 ஆகிய திகதிகளில் டொராண்டோவின் பே (Bay) மற்றும் ஃப்ரண்ட் (Front) வீதிப் பகுதிகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது, ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி இஸ்ரேலிய மற்றும் யூத மக்களுக்கு எதிராக வெறுப்பையும் வன்முறையையும் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமைப்புகளுடன் தொடர்பு மற்றும் விசேட விசாரணை: 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் சந்தேகநபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின் போது பல மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.
டொராண்டோ பொலிஸாரின் வெறுப்புக் குற்றப் பிரிவு (Hate Crime Unit) மற்றும் கனடிய அரச காவலின் (RCMP) ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு அமலாக்கக் குழு (INSET) இணைந்து நடத்திய தீவிர விசாரணைகளில், கனடாவினால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ‘ஹமாஸ்’ (Hamas) இயக்கத்திற்கு ஆதரவாகவும் அதனுடன் இணைந்தும் சந்தேகநபர் செயற்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேகநபரின் விபரங்கள்:
பெயர் மற்றும் வயது: அகமத் ஹசன் ஹாஜ் அகமத் (Ahmad Hassan Hajahmad – 33)
குற்றச்சாட்டு: பயங்கரவாத அமைப்பொன்றின் நடவடிக்கைகளில் பங்கேற்றமை அல்லது பங்களித்தமை (Participating in the activities of a terrorist group).
அதிகாரிகளின் கருத்து மற்றும் சட்ட நடவடிக்கை: இச் சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த டொராண்டோ பொலிஸ் தலைமை அதிகாரி மைரன் டெம்கிவ் (Myron Demkiw);
“ஆர்ப்பாட்டங்களின் போது இழைக்கப்படும் குற்றங்கள், நிகழ்வுகள் முடிவடைவதோடு முடிந்து விடுவதில்லை. சட்டத்தை மீறுபவர்கள் எவ்வளவு காலம் எடுத்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்பதை இந்த விசாரணை உணர்த்துகிறது” எனக் குறிப்பிட்டார்.
ஒன்டாரியோ மாகாண சட்டமா அதிபர் மற்றும் கனடிய கூட்டாட்சி அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஒப்புதலுடன் சந்தேகநபருக்கு எதிராகப் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இக் கைது நடவடிக்கையை வரவேற்றுள்ள இஸ்ரேலிய மற்றும் யூத விவகாரங்களுக்கான மையம் (CIJA), தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்புபவர்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயற்படுபவர்களுக்கு எதிராக கனடிய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.