ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடரில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், பங்களாதேஷ் அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த அபார வெற்றியின் மூலம் பங்களாதேஷ் அணி 66.67 சதவீத புள்ளிகளுடன் (PCT) WTC பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
டார்வினில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, பங்களாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறியது. தொடக்க வீரர்களை ஹசன் மமுத் விரைவாக வெளியேற்ற, முன்னாள் உலக டெஸ்ட் சாம்பியன்களான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார்.
அதிரடியாகப் பந்துவீசிய ஆட்ட நாயகன் ஹசன் மமுத் 55 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மிரட்ட, ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 198 ஓட்டங்களுக்குச் சுருண்டது.
பதிலுக்குத் தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி தரப்பில், தொடக்க வீரர் தன்சித் ஹசன் 197 பந்துகளில் 101 ஓட்டங்களைக் குவித்து பிரம்மாண்ட சதமடித்தார். இவருக்கு உறுதுணையாக நின்ற கேப்டன் ஹொசைன் சாண்டோ 126 பந்துகளில் 84 ஓட்டங்களையும், மெஹதி ஹசன் மிராஜ் 154 பந்துகளில் 65 ஓட்டங்களையும் சேர்த்தனர்.
போட்டிக்குப் பிறகு பேசிய வெற்றிக்கு வித்திட்ட கேப்டன் ஹொசைன் சாண்டோ கூறியதாவது:
“நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்; என்னைப் பற்றியும் பையன்கள் விளையாடிய விதத்தைப் பற்றியும் பெருமிதம் கொள்கிறேன். நாங்கள் மிகப்பெரிய உழைப்பைக் கொட்டியுள்ளோம்.
இது அனைத்து வடிவங்களிலும் பங்களாதேஷின் மிகியப்பெரிய வெற்றியாகும். எதிர்காலத்தில் நாங்கள் இன்னும் பல சிறப்பான சாதனைகளைப் படைக்க விரும்புகிறோம்” என்றார்.