மண்சரிவு மற்றும் வெள்ளம் என்பவற்றால் சேதமடைந்த புகையிரத வீதிகளை புனரமைப்பதற்கு 400 மில்லியன் டொலர் செலவாகக் கூடும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரித்தான 293 வீதிகள் அனர்த்தங்களால் உபயோகிக்க முடியாத வகையில் சேதமடைந்தன. எனினும் தற்போது அவற்றில் 292 வீதிகள் புனரமைக்கப்பட்டு போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளன. அதேவேளை சுமார் 40 பாலங்களும் சேதமடைந்தன. அவற்றில் 20 பாலங்கள் புனரமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. எனினும் அவை தற்காலிக புனரமைப்புக்களுக்கே உட்படுத்தப்பட்டுள்ளன.
40 பாலங்களையும் முழுமையான பயன்பாட்டுக்கு உட்படுத்தக் கூடியவாறு புனரைமைப்பதற்கு சற்று காலம் செல்லும். அதற்கான நடவடிக்கைகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பாலங்களைப் புனரமைப்பதற்காக வெளிநாடுகளிடமிருந்து நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று சேதமடைந்தவற்றில் பல புகையிரத வீதிகள் புனரமைக்கப்பட்டு அவற்றில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது. எனினும் யாழ்ப்பாணத்துக்கான புகையிரத வீதியில் புகையிரத போக்குவரத்துக்கள் நாத்தாண்டியா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய மலைநாட்டுக்கான புகையிரத போக்குவரத்துக்கள் பொல்கஹாவெல வரை முன்னெடுக்கப்படுகின்றன.
புகையிரத வீதிகள் புனரமைக்கப்பட்டு வழமைக்கு திரும்புவதற்கும் குறிப்பிட்டளவு காலம் செல்லும். இதற்கு சுமார் 400 மில்லியன் டொலர் செலவாகும் என புகையிரத திணைக்களம் மதிப்பிட்டுள்ளது என்றார்.