கனேடிய நாடாளுமன்றில் Progressive Conservative Party இன் உறுப்பினர் லோகன் கணபதி டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட இலங்கை தொடர்பான தனது பதிவினை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் தனது உரையில் நவம்பர் 28ஆம் திகதி இலங்கைத் தீவை அழித்து நினைத்துப் பார்க்க முடியா இழப்பை ஏற்படுத்திய மிகவும் கொடிய சூறாவளியான டிட்வாவைப் பற்றிப் பேச இன்று நான் கனத்த இதயத்துடன் எழுந்திருக்கின்றேன். இது 2004 சுனாமியை விட மோசமானது. 600இற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கின்றார்கள். 190 பேர் காணாமற்போயுள்ளனர். 500,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
மேலும் 1.7 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய மற்றும் மலைநாட்டுப் பகுதிகள் குறிப்பாகக் கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய பிரதேசங்கள் நிலச்சரிவினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
சில கிராமங்கள் மண்சரிவினால் முழுமையாக மண்ணுக்குள் புதைக்கப்பட்டுள்ளன.
அது மாத்திரமன்றி புத்தளம், கம்பஹா, மன்னார், முல்லைத்தீவு போன்ற இடங்களையும் கடுமையான வெள்ளம் பாதித்தது. வீடுகள் அழிக்கப்பட்டன. மேலும் பல மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒன்ராறியோவில் 400,000 இற்கு மேற்பட்ட மக்களின் உறவினர்கள் இலங்கையில் இருக்கின்றார்கள். மேலும் பலர் தமது அன்புக்குரியவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளார்கள். இதில் மார்க்கம், தோர்ன்ஹில் மக்களும் அடங்குவர்.
இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்த அழகான தீவில் வசிக்கும் மக்களின் நல்வாழ்வு மீளவும் கட்டியெழுப்பப்பட வேண்டும். அவர்கள் மன நிம்மதியுடன் தங்களது வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கும்போது அவர்களுக்கு நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிற்கவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.
‘கனவுகள் வாழும் நம்பிக்கை மீண்டும் மலரும்”
என்ற வாசகத்தோடு அவர் தனது உரையினை நிறைவுசெய்துள்ளார்.