சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தரும் எல்ல பிரதேசத்தில் அதிகரிக்கும் வீதி விபத்துக்களினால் சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, எல்ல பிரதேசத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய லொத்தர் சபையுடன் இணைந்து எல்ல பிரதேசத்தில் உள்ள வீதிகளை புனரமைத்து சீரமைப்பதற்கு இன்னும் கொஞ்சம் கவனமாக என்ற வீதி பாதுகாப்பு திட்டத்தை மேற்கொள்ள உள்ளோம் என எல்ல பிரதேச சபையின் தவிசாளர் வெனுர மலிந்த திசாநாயக்க தெரிவித்தார்.
தேசிய லொத்தர் சபை மற்றும் எல்ல பிரதேச சபை இணைந்து பதுளை – எல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளவுள்ள ;இன்னும் கொஞ்சம் கவனமாக| என்ற வீதி பாதுகாப்பு திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் காலை கைச்சாத்திடப்பட்டது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே எல்ல பிரதேச சபையின் தவிசாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தவிசாளர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் செப்டெம்பர் 04 ஆம் திகதி இரவு இடம்பெற்ற பாரிய பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.
சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தரும் பிரதேசம் தான் எல்ல பிரதேசம். ஆனால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படும் பிரதேசங்களில் ஒன்றாகவும் எல்ல பிரதேசம் காணப்படுகிறது.
மழை காலங்களில் எல்ல பிரதேசத்தில் உள்ள வீதிகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. இதனால் அப்பிரதேசத்தில் அடிக்கடி வீதி விபத்துக்களும் ஏற்படுகின்றது. எனவே, எல்ல பிரதேசத்தில் உள்ள பாதிக்கப்பட்ட மற்றும் எச்சரிக்கையான வீதிகளை புனரமைத்து சீரமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.
இந்த திட்டத்திற்கு தேவையான நிதி உதவிகளை வழங்க தேசிய லொத்தர் சபை எமக்கு உதவுகிறது. இந்த திட்டம் வெற்றிகரமாக செயற்படுத்தப்படும் என நம்புகிறோம் என எல்ல பிரதேச சபையின் தவிசாளர் வெனுர மலிந்த திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் லொத்தர் சபையின் தலைவர் எம்.டி. சிறில் அந்தோனி பெரேரா மற்றும் எல்ல பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.