சென்னை:
சுற்றுச்சூழல் மாசைக் குறைப்பதற்கான ஒரு முக்கிய முன்னெடுப்பாக, இனிமேல் சுற்றுச்சூழல் துறை பயன்பாட்டிற்கு ஹைபிரிட் (Hybrid) அல்லது மின்சார வாகனங்கள் (EV) மட்டுமே வாங்கப்படும் என அத்துறைக்கான அமைச்சர் ராஜீவ் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்குப் பதிலளித்து அமைச்சர் ராஜீவ் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
-
வாகனக் கொள்முதல் & கோயம்பேடு மாற்றம்: சுற்றுச்சூழல் துறைக்கு இனி இ.வி அல்லது ஹைபிரிட் வாகனங்கள் மட்டுமே வாங்கப்படும். மேலும், நாளொன்றுக்கு சுமார் 24,000 வாகனங்கள் வந்துசெல்லும் கோயம்பேடு சந்தையில் ஏற்படும் மாசைக் குறைக்க, அங்கு பயன்படுத்தப்படும் வர்த்தக வாகனங்களை முழுமையாக மின்சார வாகனங்களாக மாற்றும் திட்டம் முன்னெடுக்கப்படும்.
-
நகர்ப்புற வெப்பம் தணிக்கும் திட்டம்: நகர்ப்புற வெப்பத்தைக் குறைப்பதற்காக இந்தியாவிலேயே முதல்முறையாகக் ‘கூல் ரூப் கோட்டிங்’ (Cool roof coating) செய்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை (SOP) வெளியிடப்பட்டுள்ளது. குறைந்த மின்சார பயன்பாடு மற்றும் மேம்படுத்தப்பட்ட வெப்பக் காப்புடன் கூடிய கட்டிடங்களை உருவாக்க ‘ஃபேசிவ் கூலிங்’ (Passive cooling) வழிகாட்டுதல்களும் உருவாக்கப்பட உள்ளன.
-
நெய்தல் மீட்சி & பசுமைப் பள்ளிகள்: ‘தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கத்தின்’ கீழ் கடலோர உயிர்க் கேடயங்களைப் பாதுகாக்க 1,005 பரப்புகளில் அலையாத்திப் பனை மரக்கன்றுகள் நடப்படும். குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப் ‘பசுமைப் பள்ளிகள்’ திட்டத்தின்கீழ் சூரிய மின்சக்தி, மூலிகைத் தோட்டம் மற்றும் மழைநீர் சேகரிப்பு நடவடிக்கைகள் தீவிரமாகச் செயல்படுத்தப்படும்.
-
காலநிலைக் கொள்கை & அதிகாரி பாதுகாப்பு: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ‘காலநிலை மீள்திறன் தமிழ்நாடு கொள்கை’ உருவாக்கப்பட்டு, தரவு அறிவியல் மூலம் காலநிலை அபாயங்கள் முன்கூட்டியே கண்டறியப்படும். மேலும், கள ஆய்வுக்குச் செல்லும் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு இனி முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும்.
-
பிளாஸ்டிக் ஒழிப்புக்குத் தையல் யூனிட்: மகளிர் சுயஉதவிக் குழுக்களுடன் இணைந்து கோயம்பேடு சந்தையில் பிரத்யேகத் தையல் யூனிட் (Tailoring Unit) அமைக்கப்படும். பொதுமக்கள் துணியைக் கொடுத்தால் 1, 3 மற்றும் 5 கிலோ கொள்ளளவு கொண்ட துணிப்பைகளைத் தைத்து வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
-
‘மைகிரீன்’ (MyGreen) செயலி: இப்புதிய செயலி மூலம் தன்னார்வலர்கள் மற்றும் துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்து சுத்தம் செய்யும் பணி முன்னெடுக்கப்படும்.
-
மனுக்களுக்குத் தீர்வு: முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு வந்த 3,146 புகார்களில், கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இதுவரை 2,539 மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Hashtags:
#MinisterRajiv #EnvironmentDept #ElectricVehicles #GoGreen #ClimateChange #CoolRoof #KoyambeduMarket #TNAssembly #TVKGovt #TNPolitics #TamilNaduNews #ChennaiNews #TamilNews #BreakingNewsTamil