நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த வேண்டும் என தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் மற்றும் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்று கட்டளையிட்டுள்ளது.
இந்தக் கட்டளைக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
வழக்கின் பின்னணி:
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் தெரிவின் போது கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்டதாக கூறி, பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் இராசேந்திரம் என்பவரை சுமந்திரன் கடிதம் மூலம் இடைநிறுத்தியிருந்தார்.
இதனை சவாலுக்கு உட்படுத்திய இராசேந்திரம், மத்தியக் குழு தீர்மானம் எதுவுமின்றி தன்னிச்சையாக நீக்கப்பட்டதாக கூறி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
விசாரணையின் போது தமிழரசு கட்சியின் சார்பில் ஆஜரான சிவஞானம் மற்றும் சுமந்திரன் ஆகியோர், இந்த வழக்கு தாக்கல் செய்வதே தவறு என எழுத்துமூலம் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.
அந்த ஆட்சேபனை தவறானது என மன்று கூறி, இருவரும் தலா 10,000 ரூபாய் வழக்குச் செலவை செலுத்த வேண்டும் என செவ்வாய்க்கிழமை (மே 12) கட்டளையிட்டது. வழக்கு ஜூலை 07 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது