அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தம்மையும் தனது பிள்ளைகளையும் கண்காணித்ததாக குற்றச்சாட்டு
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) பணிப்பாளர் சுரேஷ் சாலியின் மனைவியான மனோரி சாலி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துடன் (CID) தொடர்புடையவர் என நம்பப்படும் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரால் தம்மையும் தனது இரு பிள்ளைகளையும் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாகக் கூறி, குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையில் முறைப்பாடு செய்துள்ளார்.
சிவில் உடையில் இருந்த நபர் ஒருவர், பல சந்தர்ப்பங்களில் தங்கள் குடும்பத்தினரை மிக நெருக்கமாகக் கண்காணித்து வந்ததாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாட்டின்படி, நேற்று (21) அவரது 17 வயது மகளும் 22 வயது மகனும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள தங்களது தந்தையைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்த போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த நபர் தனது இரு பிள்ளைகளையும் பின்தொடர்ந்து சென்றதுடன், மொபைல் போனைப் பயன்படுத்தி அவர்களைப் புகைப்படம் அல்லது காணொளி எடுத்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதே நபர் இதற்கு முன்னரும் தேசிய வைத்தியசாலைக்கு அருகாமையிலும், சிஐடி (CID) வளாகத்திற்கு அருகிலும் காணப்பட்டதாக மனோரி சாலி மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து சுயாதீன விசாரணையை ஆரம்பிக்குமாறும், சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் காணுமாறும், யாருடைய உத்தரவின் கீழ் இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதைக் கண்டறியுமாறும் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.