சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்று(10)முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறும், நீதி கோரிய பதாதைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும். இந்த மனித உரிமைகள் தினத்திலும் எமது உறவுகள் எங்கே? எமது உறவுகளுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என அவர்கள் வலியுறுத்தினார்கள்.
அத்துடன் அரசியல் கைதிகளுக்கான விடுதலை, பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் குரல் கொடுத்ததுடன் சர்வதேச நாடுகள் மனித உரிமை தினத்திலாவது தங்களுடைய துன்பங்களை புரிந்து கொண்டு தமக்கான தீர்வை பெற்று தருவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அம்பாறை மாவட்ட வழிந்து காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில்,தம்பிலுவில் பொதுச்சந்தை முன்பாக சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உப-தலைவி கலைவாணி, செயலாளர் ரஞ்சனா தேவி, பொருளாளர் சுனித்திரா தேவி மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளரும், அம்பாறை மாவட்ட வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஆலோசகருமான தாமோதரம் பிரதீபன் உள்ளிட்டவர்களும் பல பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து வெளியிட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன் உள்ளிட்டோர் தமது உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்படுவதாகவும் மாறி மாறி வருகின்ற ஒவ்வோர் அரசாங்கங்களும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியை மறுப்பதாகவும், மனித உரிமைகளை மதிக்கவுமில்லை எனவும், தொடர்ந்தும் வீதி வீதியாகத் தாம் தமக்கான நீதிக்காகப் போராடுவதாகவும் கூறினர்.
ஊடகவியலாளர்கள்,செயற்பாட்டாளர்கள்,அச்சுறுத்தப்படுவதாகவும் அண்மையில் ஊடகவியலாளர்கள் குமணன் மற்றும் கஜகிரீவன் ஆகியோர் அச்சுறுத்தப்பட்டனர் எனவும் தம்மைப் போன்ற செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் வடக்கு கிழக்கின் பல இடங்களிலும் தொல்லியல் எனும் போர்வையில் காணி அபகரிப்புகளும், புத்தர் சிலை நிறுவுதல் எனும் போர்வையில் நடைபெறும் அபகரிப்புகளும் தொடர்ந்த வண்ணமே காணப்படுவதாகவும் கூறினர்.
எமது உறவுகளுக்கான தீர்வு வேண்டும். அது சர்வதேசத்தினூடாவே வேண்டும் என்பதைத் தான் நாங்கள் எங்கள் ஒவ்வொரு போராட்டம் ஊடகவும், ஊடக சந்திப்புகள் ஊடாகவும் வெளிப்படுத்தி வருகின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார்.
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று மட்டு.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் நடாத்தியது.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். ஆனால் நாங்கள் 17 வருடங்களாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி வேண்டி சர்வதேசத்திடம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.
இதுவரைக்கும் எமக்கு நீதி மறுக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது. தற்பாதைய ஜனாதிபதியும், அரசாங்கமும் அனைவராலும் போற்றப்பட்டாலும் எமது பாதிக்கப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான ஒரு நீதிப் பொறிமுறையை உருவாக்குவதற்கு இயலாத அரசாங்கமாகவே இருக்கின்றது.
இவர்களும் ஒரு இனவாத்துடனேயே செயற்பட்டு வருகின்றனர். இந்த அரசும் கடந்த காலங்களில் எக்காரணத்திற்காகவும் நாங்கள் இலங்கை இராணுவத்தை விசாரணைக்குட்படுத்த மாட்டோம் என்று சொல்லியிருக்கின்றார்கள். இதன் காரணமாகவே நாங்கள் சர்வதேச நீதிப் பொறிமுறையை நாடி நிற்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10), வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகளுக்கு தங்கள் நிலை குறித்து கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தேடி 16 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறோம். எமது போராட்டம் பதில்களோ அன்றி நீதியோ இல்லாமல் தொடர்கிறது.எங்கள் அன்புக்குரியவர்களின் நிலை என்ன என்று தெரியாமல், வாழ்க்கை தாங்க முடியாத அளவு துயரமாக உள்ளது.
இந்த “சர்வதேச மனித உரிமைகள் தினம்” 1948 டிசம்பர் 10 முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த ஆண்டு முதல், (இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது தொடக்கம்) இலங்கையில் தமிழர்கள் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு ,ஒடுக்கப்பட்டு, அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இனப்படுகொலையின் மிகவும் கொடூரமான இனப்படுகொலையொன்று முள்ளிவாய்க்காலில் 2009 மே மாதம் மேற்கொள்ளப்பட்டது.
சரணடைந்தவர்கள் விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்படுவார்கள் என்று பொய்யான வாக்குறுதி அளித்து அதை நம்பி தாமாகவே சரண்டைந்த, 29 குழந்தைகள் உட்பட குடும்பமாகச் சரணடைந்தவர்களும் உறவுகளால் கையளிக்கப்பட்டவர்களும்,இலங்கை அரசாங்கத்தால், வலிந்து காணாமலாக்கப்பட்டார்கள். அந்த நாள் முதல், எங்கள் வலி மற்றும் போராட்டம் நின்றபாடில்லை.
16 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிக்காகப் போராடும் எம்மைப் பொறுத்தவரை, இந்த ஆண்டின் மனித உரிமைகள் தினத்தின் கருப்பொருளாக இந்தக் குற்றங்களுக்கான பொறுப்பேற்பே உள்ளது.
அதிகாரத்திற்கு வரும் ஒவ்வொரு அரசாங்கமும், உள்நாட்டு வழிமுறைகள் மூலம் நீதியை வழங்கும் என்று கூறி சர்வதேச சமூகத்திற்கு முன் தன்னை ஒரு மீட்பராக முன்வைக்கிறது.
ஆயினும், ஒவ்வொரு முறையும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கோப்பை (files)ஐ மூடுவதற்கும் முன்னேற்றம் என்ற மாயையை உருவாக்குவதற்கும் செயல்திறனற்ற பொறிமுறைகள் அல்லது குறுக்கு வழிகளை அறிமுகப்படுத்துகின்றனர். சர்வதேச ஆதரவுடன், நாங்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
எமக்கான நீதியை வழங்கத் தயாராகவோ அல்லது எதிர்ப்புகளை மீறி செய்யக் கூடிய திற னுடையவராகவோ இருக்க மாட்டார். எனவே, எங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கடும் அநீதிகளுக்கான பொறுப்பேற்பு சர்வதேச விசாரணை மூலமே வர வேண்டும்,
அதுவும் காலதாமதமின்றி வர வேண்டும். எனவே, நாங்கள் நீண்ட காலமாக முன்வைத்து வரும் வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்துகிறோம்:
இனப்படுகொலை ,சர்வதேச குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு (ICC) பாரப்படுத்தவேண்டும் என்றுள்ளது.