கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு அண்மையில் (14) பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையிலும், பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களின் பங்கேற்புடனும் ஜனாதிபதி செயலகத்திலுள்ள பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் ஜனாதிபதி செயலகமும் இணைந்து செயற்படுத்தும் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டத் தொடருக்கு இணையாக கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்கள், நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவுள்ள மாணவர்கள் ஒரு அரசியல்வாதியாக அல்லாமல் ஒரு இராஜதந்திரியாக இருக்க உறுதிபூண வேண்டும் என்று தெரிவித்தார். ஏனெனில், அரசியல்வாதி அடுத்த தேர்தலில் வெற்றிபெற வாக்குகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டாலும், ஒரு இராஜதந்திரி எதிர்கால சந்ததியினரின் நலனை நோக்கமாகக் கொள்கிறார் என்று அவர் தெரிவித்தார். இதன் காரணமாக, நாட்டின் நலனுக்காக ஒரு இராஜதந்திரியாக இருப்பது முக்கியமானது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். அத்துடன், சட்டத்தை மதிக்கும், சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்களே பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்த அவர், மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களான நீங்கள் சட்டத்தை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், இந்நிகழ்வில் கலந்துகொண்ட பணியாட்தொகுதியின் பிரதானியும் பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன அவர்கள், பாராளுமன்றத்தின் வகிபங்கு குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் ஓர் உரையை நிகழ்த்தினார்.
மேலும், இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே அவர்கள், புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளித்தார். அதேபோல், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான சந்திமா விக்ரமசிங்க மற்றும் ஜி.ஜி.எஸ்.சி. ரொஹான் ஆகியோர் ஜனாதிபதி செயலகத்தின் சார்பில் கருத்துக்களைத் முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஆரம்பமானதுடன், சபாநாயகரை நியமித்தல் மற்றும் உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்தல் என்பன இடம்பெற்றன. அதன்பின்னர், மாணவர் பாராளுமன்றப் பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சர்கள் கருத்துக்களைத் தெரிவித்த பின்னர், மாணவர் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன், மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் பங்கேற்புக்காக சான்றிதழ்கள் வழங்குவதும் இதனுடன் இணைந்ததாக இடம்பெற்றது.
இந்த நிகழ்ச்சித்திட்டம் மாணவர்களின் தலைமைத்துவத் திறன்களை வளர்ப்பதில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது என்றும், மாணவர்களுக்குக் கிடைத்த இந்த வாய்ப்புக்குத் தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் அதிபர் சம்பத் வேரகொட அவர்கள் தனது நன்றி உரையில் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட தரப்பினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.