நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
1971 ஆம் ஆண்டு முதலாம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதிய சட்டத்தை அகற்றுவது குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது கொள்கை பிரகடனத்தை வெளியிட்டிருந்தது.
இந்த கொள்கை பிரகடனத்தின் அடிப்படையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை துணைக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதிய உரிமையை ரத்து செய்வதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும்.
இந்த சட்டத்தை ரத்து செய்வதற்காக கடந்த ஜூன் மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கொள்கை ரீதியான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சட்டம் வரைவு செய்யப்பட்டு அது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்தை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் நாடாளுமன்றில் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.
இந்த சட்டமூலத்தை வர்த்தமானியில் அறிவிப்பதற்கும் அதன் பின்னர் அனுமதி பெற்று கொள்வதற்காக நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த சட்டம் தொடர்பில் இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அவர்களுடைய வாழ்க்கை துணைக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் இரத்து செய்யப்படும் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எவ்வாறு எனினும் ஏற்கனவே செலுத்தப்பட்ட தொகைகள் அவர்களிடமிருந்து மீள அறவீடு செய்யப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.