அல்பெர்டா முதல்வர் டேனியல் ஸ்மித், மாகாணத்துக்கான குடியேற்றத்தை வரையறுக்கும் நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பின் கீழ் மாகாணத்திற்கு மேலும் அதிகாரங்களை வழங்கும் மாற்றங்கள் குறித்து அக்டோபர் மாதத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த விரும்புவதாக அறிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை மாலை ஒளிபரப்பான தொலைக்காட்சி உரையில், அக்டோபர் 19 அன்று ஒன்பது கேள்விகளுக்கு அல்பெர்டா மக்களிடம் வாக்களிக்க அழைக்க விரும்புவதாக ஸ்மித் தெரிவித்தார். இக்கேள்விகள் ஒவ்வொன்றும், கடந்த ஆண்டு நகர மன்றக் கூட்டங்கள் மற்றும் எழுத்துப் பதிவுகள் மூலம் மக்களுடன் ஆலோசனை நடத்திய போது “Alberta Next Panel” அதிகமாகக் கேட்ட கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
ஸ்மித்தின் இந்த உரை, Nate Horner 2026 மாகாண வரவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ள ஒரு வாரத்திற்கு முன்பாக வெளியாகியுள்ளது என்பதோடு அந்த வரவுத் திட்டத்தில் பல பில்லியன் டொலர் பற்றாக்குறை இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தேவையற்ற அலுவலகச் சிக்கல்களை குறைத்து, திட்டங்களின் செயல்திறனை மேம்படுத்தி, விருப்பங்களைக் காட்டிலும் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் நிதி கட்டுப்பாட்டை வலுப்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
மாகாணத்தில் புதிதாகச் சேர்க்கவுள்ள மூன்று அம்சங்களைக் கொண்ட திட்டத்தையும் அவர் விளக்கினார். 2035க்குள் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை இரட்டிப்பாக்குதல், ஆசிய சந்தைகளுக்கான அங்கீகாரத்தைப் பெற மேற்கு கடற்கரை நோக்கி புதிய பாதையை அமைத்தல், மற்றும் குடியேற்றத்தை கடுமையாக கட்டுப்படுத்துதல் ஆகியவை என்பது குறிப்பிடத்தக்கது.