கியூபெக் மாகாண நிதியமைச்சர் எரிக் ஜிரார்ட் (Éric Girard) சமர்ப்பிக்கின்ற மாகாணத்தின் பொருளாதார அறிக்கையில், அமெரிக்க வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள கியூபெக்கின் முக்கிய தொழில்களுக்கான நிவாரணங்கள் உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
“வாங்கும் திறனையும், பொருளாதாரத்தையும் பாதுகாத்தல்” என்ற தலைப்பில் வெளியிடப்படும் இந்த அறிக்கை, உயரும் வாழ்க்கைச் செலவுகளால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை, ஒரு சமச்சீரான வரவுசெலவுத் திட்டத்தைப் பேணுவதோடு, கியூபெக்கர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்காக கியூபெக் முதல்வர் பிரான்சுவா லெகோ (François Legault) எடுத்த உறுதிப்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள கியூபெக்கின் வனவியல், அலுமினியம் மற்றும் இரும்பு உற்பத்தித் துறையில் உள்ள நிறுவனங்களுக்காகச் சிறப்பான நடவடிக்கைகள் இந்த அறிக்கையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.