கியூபெக் மாகாணத்தில் கருப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவதற்காக, பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்த ‘பேப் டெஸ்ட்’ (Pap Test) முறைக்கு மாற்றாக, அதிகத் துல்லியமான ‘HPV’ வைரஸ் பரிசோதனை முறையை கியூபெக் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
கருப்பை வாய்ப் புற்றுநோயை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து, வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் மாகாணத்திலிருந்து இந்த நோயை முழுமையாக ஒழிப்பதே கியூபெக் அரசின் இலக்காகும்.
இதன்படி, 25 முதல் 65 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் கருப்பை வாய் கொண்ட நபர்களுக்கு இனி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பரிசோதனை செய்யப்படும்.
இதுவரை இருந்த ‘பேப் டெஸ்ட்’ முறையில் செல்கள் பாதிக்கப்பட்ட பிறகே நோயைக் கண்டறிய முடிந்தது.
ஆனால் புதிய ‘HPV’ பரிசோதனையில், புற்றுநோயை உண்டாக்கும் வைரஸ் உடலில் இருக்கிறதா என்பதை முன்கூட்டியே கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.