இலங்கையில் நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் முறையற்ற வரிக்கொள்கை மற்றும் கல்வித்துறைக்கான குறைந்தளவு நிதி ஒதுக்கீட்டினால் பாடசாலைகள் முகங்கொடுத்துவரும் நெருக்கடிகள் தொடர்பில் விளக்கியும், அவற்றுக்கான தீர்வுப்பரிந்துரைகளை உள்ளடக்கியும் ‘வரிச்சலுகைகளும் பாடசாலைகள் முகங்கொடுத்துள்ள நெருக்கடிகளும்’ எனும் தலைப்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள 101 பக்க ஆய்வறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
மேற்படி ஆய்வறிக்கையைத் தயாரித்த மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சிரேஷ்ட ஆய்வாளரும், வறுமை மற்றும் சமத்துவமின்மை தொடர்பான செயற்பாட்டாளருமான சாரா சாதுன் இலங்கையின் வரிக்கட்டமைப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
2019இல் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட மட்டுமீறிய அளவிலான வரிச்சலுகை வழங்கல் தீர்மானமானது அதன் நீட்சியான தொடர் விளைவுகளால் 2022 இல் தீவிர பொருளாதார நெருக்கடிக்கு வழிகோலியதாக 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முன்னெப்போதுமில்லாத வகையிலான தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியது. பொருளாதார நெருக்கடியை அடுத்து கடன்களை மீளச்செலுத்துவதற்கான ஆற்றலை அரசாங்கம் இழந்தமையானது குறிப்பாக உணவுப்பொருட்களின் விலைகள் மற்றும் போக்குவரத்துக் கட்டணங்களின் வலுவான அதிகரிப்புக்கும், தற்போதுவரை தொடரும் தாக்கங்களான வேலைவாய்ப்பு இழப்பு மற்றும் சம்பளக்குறைப்பு போன்ற தாக்கங்களுக்கும் வழிவகுத்தது.
போராட்டங்களால் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிபீடத்திலிருந்து துரத்தப்பட்டதுடன், அதனைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்கள் மூலம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் தெரிவுசெய்யப்பட்டது. அத்தெரிவானது புதிய பொருளாதாரக்கட்டமைப்பை உருவாக்குவதில் இலங்கையர்கள் தெளிவாக இருப்பதைக் காண்பித்தது. அதனை முன்னிறுத்தி அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும், தற்போதைய மறுசீரமைப்புக்கள் இந்நெருக்கடியின் ஆணிவேரைக் களைவதற்குப் போதுமானவையன்று.
உயர்நீதிமன்றமானது இந்நெருக்கடிக்கு வழிகோலிய உடனடிக் காரணத்தில் கவனம் செலுத்தியிருந்தது. இருப்பினும் இப்பிரச்சினைக்கான அடிப்படை பல தசாப்தங்களுக்கு முன்னரே உருவாகியிருப்பதை நாம் கண்டறிந்துள்ளோம். 1970 களின் பிற்பகுதியில் இலங்கை ஒரு பொருளாதார நிலைமாற்றத்தை நோக்கி நகர்ந்தது. பெருநிறுவனங்களுக்கும் தனவந்தர்களுக்கும் சாதகமாக அமைந்த, குறைந்தளவு வருமானத்தையே ஈட்டித்தந்த வரிக்கொள்கைகளும் அதில் உள்ளடங்குகின்றன.
இவை 2022இல் தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடிக்கு வித்திட்டதுடன் மாத்திரமன்றி, மனித உரிமைகளுக்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவேண்டிய செலவினங்களில் நிலவும் பாரிய பின்னடைவுக்கும் காரணமாக அமைந்தன. குறிப்பாக 2010 ஆம் ஆண்டளவிலே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாகக் காணப்பட்ட கல்விக்கான செலவினங்கள், 2022ஆம் ஆண்டு 1.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.
இவ்வீழ்ச்சியானது முன்னொரு காலத்தில் கல்வித்துறையில் உலகநாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த இலங்கை போன்றதொரு நாட்டுக்குப் பெரும் பின்னடைவாகும். தமது பிரஜைகளுக்கான இலவச ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை அறிமுகப்படுத்திய சில முதன்மை நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். சுதந்திரத்தின் பின்னர் அரச நிதி மூலம் வழங்கப்பட்ட கல்வியானது எழுத்தறிவு வீத உயர்வுக்கும், சமூக மற்றும் பொருளாதார இயங்குகைக்கும், சமத்துவமின்மை வீழ்ச்சிக்கும் பெரிதும் உதவியது.
1960 – 1970க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அரச வருமானத்தில் 90 சதவீதமானவை வரிகள் மூலம் திரட்டப்பட்டதுடன் அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 – 25 சதவீதமாகக் காணப்பட்டன. இது 3 – 5 சதவீத நிதி கல்வித்துறைக்கு செலவிடப்படுவதற்குப் பெரிதும் உதவியது.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது கல்வி உள்ளடங்கலாக இலங்கையர்களின் சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு செயற்திறன்மிக்க வழிமுறைகள் ஊடாக வருமானத்தை அதிகரிப்பதற்கு ஏதுவான வரி மறுசீரமைப்புக்களை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும். இது மனித உரிமைகளை மையப்படுத்திய பொருளாதாரக் கட்டமைப்பைக் கட்டியெழுப்பவேண்டிய தருணமாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.