தாய்லாந்து, கம்போடியா மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்லாந்து மற்றும் கம்போடியாவிற்கு இடையிலான எல்லை மோதல்களுக்கு மத்தியில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதன் காரணமாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தாய்லாந்து இராணுவப் பேச்சாளர் வின் தாய் சுவாரி இன்று (08) தெரிவித்துள்ளார்.
எல்லையில் கம்போடியப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தாய்லாந்து வீரர் ஒருவர் உயிரிழந்ததாகத் தாய்லாந்து குற்றம் சாட்டியுள்ள நிலையிலேயே இந்தத் தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
இதற்கிடையில், இந்தத் தாக்குதல்கள் மீண்டும் நடத்தப்படுவதால், இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தம் முறிவடையும் அபாயமும் தற்போது எழுந்துள்ளது.
எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி இரு நாடுகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.
அதற்கமைய, கைச்சாத்திடப்பட்ட இந்த அமைதி ஒப்பந்தம் சமீபத்திய தாக்குதல்களினால் ஆபத்தில் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எல்லை தொடர்பான பிரச்சினையை மையமாக வைத்து கடந்த ஜூலை மாதத்தின் பிற்பகுதியில் தாய்லாந்து மற்றும் கம்போடியாவிற்கு இடையிலான மோதல்கள் தீவிரமடைந்ததோடு, இதனுடன் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் 817 கிலோமீட்டர் எல்லையை முற்றாக மூடுவதற்கும் தாய்லாந்து நடவடிக்கை எடுத்தது.
இரு நாடுகளுக்கும் இடையில் நிலவிய இந்த மோதல்கள் காரணமாக ஜூலை மாதத்தில் ஐந்து நாட்களில் 48 பேர் உயிரிழந்ததோடு, மேலும் சுமார் 300,000 பேர் இடம்பெயர்ந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.