கனடா கேன்மோர் இன் அண்ட் ஸூட்ஸ் ஹோட்டலின் நீச்சல் குளத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை 11 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவசர சுகாதார சேவைகள் (EHS) தெரிவித்தன.
கேன்மோர் தீயணைப்பு-மீட்பு பிரிவுக்கு ஆபத்தான இரசாயனங்கள் தொடர்பான (ஹாஸ்மாட்) அழைப்பு வந்ததாக கேன்மோர் நகராட்சி தெரிவித்தது. அதன் பின்னர் அவர்கள் அங்கு விரைந்த போது நீச்சல் குளப் பகுதியில் சுமார் 30 குழந்தைகள் வாந்தி உள்ளிட்ட உடல்நலக் குறைவு அறிகுறிகளுடன் இருப்பதை மீட்புப் பணியாளர்கள் கண்டனர்.
இது இரசாயனத் தாக்கம் காரணமாக இருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் சந்தேகித்து, நீச்சல் குளப் பகுதி காற்றைச் சோதனை செய்ததில், ஆபத்தான ஒரு பொருளின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
இடத்தின் தன்மையும் காணப்பட்ட அறிகுறிகளையும் அடிப்படையாகக் கொண்டு, குளோரின் இதற்குக் காரணமாக இருக்கலாம் என நகராட்சி தெரிவித்தது.
ஒன்பது குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிசோதிக்கப்பட்டு, அவர்களது பெற்றோரால் கேன்மோர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்; ஒரு குழந்தை ஆம்புலன்ஸ் மூலம் அங்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும், நீச்சல் குளத்தை இயக்கும் உரிமம் பெற்ற இரசாயன மேலாண்மை நிறுவனம் இந்த சம்பவம் குறித்து தற்போது ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.