வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி மாவட்டத்தில் 35 பாடசாலை மாணவர்களும் 10 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நிஹால் அலஹகோன் தெரிவித்துள்ளார்.
மாத்தளை மாவட்டத்தில் பாடசாலை மாணவர் உயிரிழந்துள்ளதாகவும், நுவரெலியா மாவட்டத்தில் தற்போது தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
காணாமல் போன மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி மாவட்டத்தில் 97,850 மாணவர்கள் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாத்தளை மாவட்டத்தில் 8,500 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நுவரெலியா மாவட்டத்திற்கான புள்ளிவிவரங்கள் தற்போது கணக்கிடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி மாவட்டத்தில் 130 பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அதிக எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் இடம்பெயர்வு முகாம்களில் உள்ளனர்.
மேலும் 16 ஆம் திகதி பாடசாலைகள் மீள திறக்கப்படுவதால், அவர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு சென்று கல்வி கற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.