‘என்ன நடக்கிறது கட்சியில்…’ என, காங்., மூத்த தலைவர்கள் கொந்தளிக்கின்றனர். பீஹார் சட்டசபை தேர்தல் படுதோல்விக்கு பின், காங்கிரசின் நிலை என்னவாகும் என, இவர்கள் கவலையில் உள்ளனர். ஆனால், எது குறித்தும் கவலைப்படாமல், வெளிநாடு பயணத்தில் கவனமாக உள்ளார் ராகுல்’ என, அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
சமீபத்தில், ராகுல் தலைமையில் லோக்சபா காங்., – எம்.பி.,க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பார்லிமென்டில் எம்.பி.,க்கள் எப்படி பேசினர், அடுத்து பா.ஜ.,வை அவையில் எப்படி மடக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், திருவனந்தபுரம் காங்., – எம்.பி., சசி தரூர் பங்கேற்கவில்லை.
‘வெளியூரில் ஏற்கனவே ஒத்துக்கொண்ட நிகழ்ச்சி உள்ளது’ என, சாக்கு சொல்லிவிட்டாராம் தரூர். இதற்கு முன்பாகவும் ஒருமுறை, ராகுல் தலைமையில் நடந்த கூட்டத்திலும் இவர் பங்கேற்கவில்லை. ‘கொல்கட்டாவில் இருக்கிறேன்’ என, அப்போதும் சொல்லி தப்பித்துவிட்டாராம் தரூர். இப்படி முக்கிய கூட்டங்களில் பங்கேற்பதை அவர் தவிர்த்து வருகிறார்.
ஏற்கனவே மோடிக்கு நெருக்க மானவராகி விட்டார் தரூர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு, ஜனாதிபதி விருந்து அளித்தபோது ராகு லை அழைக்காமல், தரூரை மோடி அரசு அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
‘தரூரை அழைத்து, ராகுல் தனியாக பேசியிருக்க வேண்டும்’ என பல மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். ஆனால், ராகுலோ கட்சியினரை சந்திக்க தயாராக இல்லை.
ஒடிஷாவின் முன்னாள் எம்.எல்.ஏ., முகமது; இவர் குடும்ப மே காங்கிரஸ் குடும்பம். இவர் ‘கடந்த மூன்று ஆண்டுகளாக ராகுலை சந்திக்க முயற்சித்து வருகிறேன்; ஆனால் முடியவி ல்லை. தொண்டர்களுக்கும், தலைமைக்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது. 83 வயதான காங்கிரசின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவால், கட்சியின் இளைஞர்களுக்கு சரியாக வழிகாட் ட முடியவில்லை’ என்று கோபமாக, கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாவிற்கு நீண்ட கடிதம் எழுதிஉள்ளார்.
இன்னொரு பக்கம், ராகுலின் கொள்கைகள் குறித்தும் கேள்விகள் எழுப்புகின்றனர் மூத்த தலைவர்கள். ‘ஏழைகளின் பக்கம் காங்கிரஸ் என, பிரதமர்களாக இருந்த இந்திரா, ராஜிவ் காலத்திலிருந்து கொள்கை உள்ளது. ஆனால், ஜாதிகளிடையே பிரிவினையை உண்டாக்கி வருகிறார் ராகுல்.
பிற்பட்டவர்கள், பட்டியலினத்தவர் என, ஒருசாராரை மட்டும் ஓட்டு வங்கியாக நினைத்து செயல்பட்டு வருகிறார். இதன் விளைவு தான், பீஹார் தேர்தலில் படுதோல்வி. இப்படி பிரிவினையை உண்டாக்கக் கூடாது’ என, நொந்துபோய் சொல்கின்றனர் காங்., மூத்த தலைவர்கள்.