வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, டில்லியில் தரை இறங்க வேண்டிய ஏர் இந்தியா விமானம் ஒன்று ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் பிராங்பர்ட் நகரில் இருந்து புதுடில்லிக்கு சென்று கொண்டிருந்த போயிங் 787-9 ரக விமானம், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டு அவசர அவசரமாக அங்கு தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் ஏ.ஐ.2030 என்ற மேற்படி விமானம், பாதுகாப்புச் சோதனைகளுக்காகத் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் உதவி ஆணையர் ஷிவ் தயாள் இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கையில், விமானம் மும்பை விமானத் தகவல் மண்டலத்தில் இருந்தபோது, சட்டவிரோத தலையீட்டைக் குறிக்கும் குறியீட்டை விமானி பயன்படுத்தினார் என ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன என குறிப்பிட்டார்.
அத்துடன், விமானத்தில் இருந்த பயணிகளின் எண்ணிக்கையை உடனடியாக அறிய முடியவில்லை எனவும் இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பொலிஸ் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.