இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, , இறந்த விலங்குகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்த முக்கியமான பொது சுகாதார வழிகாட்டுதல்களை உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை கிளை வெளியிட்டுள்ளது.
வெள்ளம், நோய் அல்லது காயங்கள் காரணமாக இறக்கும் விலங்குகளின் சடலங்களைச் சரியாகக் கையாளாவிட்டால், அவை தீவிர சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
அதற்கமைய, வெள்ளத்திற்குப் பிறகு காணப்படும் இறந்த மீன்கள் உட்பட எந்தவொரு விலங்கு சடலத்தையும் பொதுமக்கள் தொடுவது, சேகரிப்பது அல்லது உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
இறந்த விலங்குகளைக் கையாள்வதற்கு முன்னர், பொதுமக்கள் உடனடியாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அல்லது உள்ளூர் அதிகாரிகளிடம் ஆலோசனை பெற வேண்டும்.
அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுபவர்கள், தொற்று அபாயத்தைக் குறைக்க கையுறை, பூட்ஸ் (Boots) மற்றும் முகக்கவசங்கள் போன்ற பாதுகாப்பு பொருட்களை பயன்படுத்துவது அவசியமாகும்.
சவர்க்காரம் மற்றும் சுத்தமான நீரைக் கொண்டு கைகளைத் தவறாமல் சுத்தமாகக் கழுவுதல் உள்ளிட்ட கடுமையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். சுகாதார அபாயங்களைக் குறைக்க உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் சில நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கிறது.
உணவு மற்றும் குடிநீர் ஆதாரங்களைப் பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். இறந்த விலங்குகளின் சடலங்களை உடனடியாக அகற்ற உறுதி செய்ய வேண்டும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் வெளிப்புற வேலைகளைச் செய்யும்போது கொசு விரட்டிகளைப் பயன்படுத்த வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.