நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைக்கு மத்தியில் மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு கூடியுள்ளது.
வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால் காந்த ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் உணவுப் பாதுகாப்புக் குழு கூடியுள்ளது.
இந்த அனர்த்தத்திற்குப் பிந்தைய காலத்தில் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களின் விநியோகம் மற்றும் விலை நிலைமைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
பயிர் நிலங்களுக்கு ஏற்பட்ட சேதங்களைப் பயன்படுத்தி, சில வியாபாரிகள் சந்தையில் செயற்கையாக விலையை உயர்த்த முயற்சிப்பதை முறியடிப்பதற்கு தேவையான தீர்மானங்களை உணவுப் பாதுகாப்புக் குழு எடுத்துள்ளது.
இதன்படி, சந்தையில் செயற்கையாக உருவாக்கப்பட்ட விலை உயர்வுகளை கட்டுப்படுத்துவதற்காக உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பருப்பு போன்ற உணவுப் பொருட்களை இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் ஊடாக இறக்குமதி செய்வதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த உணவுப் பொருட்களை அரச பொறிமுறையின் ஊடாக லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் நுகர்வோருக்கு வழங்குவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் உணவுப் பாதுகாப்புக் குழு கலந்துரையாடியுள்ளது.
‘திட்வா’ புயலுடன் நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைக்கு மத்தியில் மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு வாராந்தம் கூடவும் தீர்மானித்துள்ளது.