பயங்கரவாத விசாரணைப்பிரிவு இஸ்ரேலுக்கான கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டிக்க முடியாத அளவுக்கு வெளிவிவகார அமைச்சு கோழைத்தனமாக மாறியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (17) இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைசசு மற்றும் நீதி மற்றம் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை. என்றாலும் இதுதொடர்பில் நாங்கள் கேள்வி எழுப்பினால் அங்கு பெளத்தர்கள் இருக்கிறார்கள். அதனால் பெளத்த விகாரை அமைப்பதில் என்ன தவறு என கேட்பீர்கள். ஆனால் யூதர்கள் இல்லாத நிலையில் ஏன் யூத வழிபாட்டு நிலையம் அமைக்கப்படுகிறது என கேட்கிறோம்.
கொழும்பில் யூதர்களின் சபாத் இல்லம் அமைக்கப்படுவது தொடர்பி்ல் இந்த சபையில் கேட்கப்பட்டபோது, அது அதிகாரம் அளிக்கப்படாத ஒன்று என பிரதமர் சபையில் தெரிவித்திருந்தார். இதனை அடிப்படையாகக்கொண்டு, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவர் இதுதொடர்பில் மாநகர சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள மாநகர மேயரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டபோது, அது தொடர்பில் குறித்த உறுப்பினரை குற்றப்புலனாய்வு பிரவுக்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
சபாத் இல்லம் மூடப்படவேண்டும் என பொதுத்துவில் பிரதேச சபையில் பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றப்பட வேண்டும் என முகப்புத்தகத்தில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் பொத்துவில் பொலிஸாரால் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.குற்றப்புலனாய்வு பிரிவை ஏன் இவ்வாறு துஷ்பிரயோகம் செய்ய வேண்டு்ம் என கேட்கிறோம்.
மேலும் இஸ்ரேல் அண்மையில் கட்டார் மீது பயங்கரவாத தாக்குதல் ஒன்றை நடத்தி இருந்தது. இதுதொடர்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கட்டார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் நாங்கள் அவதானம் செலுத்தி இருக்கிறோம் என்றே தெரிவித்திருக்கிறது. கட்டார் மீது விமான தாக்குதல் நடத்திய இஸ்ரேலின் பெயரை குறிப்பிட்டு அதனை கண்டித்து அறிக்கை வெளியிட முடியாத அளவுக்கு வெளிவிவகார அமைச்சு கோழைத்தனமாக மாறியுள்ளது. இவ்வாறான அறிக்கை ஒன்றை வெளியிடுவதை விட வெளியிடாமல் இருந்திருக்கலாம். பயங்கரவாத தாக்குதலை நடத்திய இஸ்ரேலின் பெயரை குறிப்பிட உங்களுக்கு தைரியம் இல்லை.
அதேபோன்று பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் அநீதிகளை கண்டித்து,இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிகர் ஒட்டியமைக்காக இளைஞர் ஒருவர் பயங்கரவார தடைச்சட்த்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தார்.பயங்கரவாத விசாரணை பிரிவு இஸ்ரேலுக்கான கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பயங்கரவார தடைச்சட்டத்தை நீக்குவதாக தெரிவித்த அரசாங்கம் தற்போது அப்பாவிகளுக்கு எதிராக அதனை பயன்படுத்தி வருகிறது என்றார்.
இதற்கு நீதி அமைச்சர், ஹர்ஷன நாணயக்கார பதிலளிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டம் தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ளது. தற்பாேது அது தமிழ். சிங்கள மொழிபெயர்ப்புக்கு விடுவிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் அது பொது மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்ள விடுவிக்கப்படும். அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.