இலங்கைவாழ் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும், சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறை ஒன்றின் தேவைப்பாட்டினையும் பிரித்தானியத் தமிழர் பேரவை உறுப்பினர்கள் ஸ்கொட்லாந்து முதலமைச்சர் ஜோன் ஸ்வின்னிக்கிடம் வலியுறுத்தியுள்ளனர்.
ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் (முதலமைச்சரே ஸ்கொட்லாந்து அரசாங்கத்தின் தலைவரும் அரசாங்கத்தின் சகல கொள்கைகள், தீர்மானங்களுக்குப் பொறுப்பானவரும் ஆவார்) ஜோன் ஸ்வின்னிக்கும் பிரித்தானியத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது சுமார் 16 வருடங்களாக நீதிக்காகக் காத்திருக்கும் தமிழ் மக்கள் தற்போது முகங்கொடுத்துவரும் மிகமோசமான நிலைவரம் தொடர்பில் பிரித்தானியத் தமிழர் பேரவை உறுப்பினர்கள் ஸ்கொட்லாந்து முதலமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.
அதுமாத்திரமன்றி சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறை ஒன்றின் தேவைப்பாட்டினையும், இலங்கைவாழ் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும் ஸ்கொட்லாந்து தேசிய கட்சியுடனான தொடர்புகளைத் தொடர்ந்து பேணுவதற்கு எதிர்பார்ப்பதாகவும், தமிழ் மக்களுக்கான நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நியாயமான அரசியல் அபிலாஷைகள் என்பவற்றை அடைந்துகொள்வதை இலக்காகக்கொண்டு ஸ்கொட்லாந்து தேசிய கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராக இருப்பதாகவும் பிரித்தானியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.