உலக சுகாதார ஸ்தாபனத்தால் வெளியிடப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான சுகாதார தரவுகளுக்கமைய, இலங்கையில் உள்ள வயதானவர்களில் 34 சதவீதமானோர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அர்ஜூன திலககரத்ன தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலைக்கான புதிய இதய வடிகுழாய் பிரிவின் கட்டட அடிக்கல் நாட்டு விழா சம்பிரதாயபூர்வமாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்ற சுகாதார (வைத்திய சேவை) பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அர்ஜூன திலககரத்ன தெரிவிக்கையில்,
உலக சுகாதார ஸ்தாபனத்தால் வெளியிடப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான சுகாதார தரவுகளுக்கமைய, இலங்கையில் உள்ள வயதானவர்களில் 34 சதவீதமானோர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு அடையாளம் காணப்படும் நோயாளர்களில் 25 சதவீதமானோர் மாத்திரமே உரிய சிகிச்சைகளைப் பெற்று நோயைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
மாதாந்த சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் சமூகமளிப்பவர்களில் அதிகளவானோர் இருதய நோயாளிகளாவர்.
ஆகையால் இருதய வடிகுழாய் பிரிவு போன்ற சிகிச்சைப் பிரிவுகளின் தேவை அதிகரித்துள்ளது. அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்படவுள்ள இந்த சிகிச்சைப் பிரிவின் மூலம் கொழும்பு மற்றும் காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலைகளுக்கு விசேட இருதய சிகிச்சைக்காக அனுப்பப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்துக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றார்.
இதேவேளை சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிடுகையில்,
தற்போது அரச வைத்தியசாலைக் கட்டமைப்பில் 11 இருதய வடிகுழாய் பிரிவுகள் மாத்திரமே உள்ளன. ஆகையால் சுகாதார அமைச்சரின் ஆலோசனைக்கமைய இவ்வருடம் அரச வைத்தியசாலைகளில் 7 இதய வடிகுழாய் பிரிவுகளை நிர்மாணிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இரத்தினபுரி, மட்டக்களப்பு, பதுளை, களுபோவில வைத்தியசாலைகள் உள்ளிட்ட 7 வைத்தியசாலைகளில் இவை நிர்மாணிக்கப்படவுள்ளன.
அதேபோல் அடுத்த வருடம் நாடளாவிய ரீதியில் சுமார் 14 இதய வடிகுழாய் பிரிவுகளை ஸ்தாபிப்பதற்கும் சுகாதார அமைச்சால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நாட்டின் முதல் தேசிய இருதய நோய்க்கான வைத்தியசாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகில் நிர்மாணிக்கப்படவுள்ளது. அதன் கட்டட நிர்மாணப் பணிகளை இவ்வருடம் ஆரம்பிப்பதற்குத் தேவையான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 16 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிட நிர்மாணப் பணியை எதிர்வரும் 2028 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம் என்றார்.