உலகின் முதலாவது பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய – பாகிஸ்தான் வீராங்கனைகள் கைகுலுக்கி கிரிக்கெட் ஆர்வத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தினர்.
அவர்கள் குறைபார்வை உடையவர்களாக இருந்தபோதிலும் விளையாட்டில் ஆழமான பற்றுடன்கூடிய பண்பான பார்வை இருப்பதை எடுத்துக் காட்டினர்.
பார்வையற்ற இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப் போட்டி நடுநிலையான கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக நிலைய மைதானத்தில் நடைபெற்றது.
இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா, நேபாளம், வரவேற்பு நாடான இலங்கை ஆறு நாடுகள் முதலாவது பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுகின்றன. போட்டிகள் யாவும் இலங்கையில் நடைபெற்றுவருகின்றன.
இந்திய – பாகிஸ்தான் போட்டி முடிவில் இரண்டு அணிகளினதும் வீராங்கனைகள் அரசியல் பதட்டங்களை புறந்தள்ளி வைத்துவிட்டு கைலாகு கொடுத்து தங்களது அதிசிறந்த விளையாட்டுப் பண்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டனர்.
கடந்த மே மாதம் இரண்டு நாடுகளுக்கு இடையில் கொடிய இராணுவ மோதல் இடம்பெற்ற பின்னர் கிரிக்கெட் மைதானத்திற்கு வேளியேயும் களத்திலும் பதற்றம் அதிகமாக இருந்துவருகிறது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஆடவர் ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இறுதிப் போட்டி உட்பட மூன்று தடவைகள் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றையொன்று எதிர்த்தாடிய போதிலும் அந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் இரண்டு அணியினரும் கைகுலுக்கல்களைத் தவிர்த்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியின்போதும் தோஹாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிய கிண்ண உதய தாரகைகள் போட்டியின்போதும் இரண்டு அணியினரும் வாழ்த்துக்களைப் பரிமாறாததுடன் கைகுலுக்கவும் இல்லை.
இந் நிலையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பார்வையற்ற மகளிர் ரி20 கிரிக்கெட் போட்டிக்கான நாணய சுழற்சி நடைபெற்றபோது கைகுலுக்கல் இடம் பெறாததால் இரண்டு அணிகளினதும் வீராங்கனைகள் போட்டி முடிவில் பார்வை உடைய தங்களது வீர, வீராங்கனைகளின் நடத்தையைப் பிரதிபலிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், போட்டி முடிவில் பார்வையற்ற இரண்டு அணிகளினதும் வீராங்கனைகள் அன்பை பரிமாறிக்கொண்டதுடன் கைகளை குலுக்கி பாராட்டுதல்களையும் பகிர்ந்து சிறந்த குணாம்சங்களை வெளிப்படுத்தினர்.
கட்டுநாயக்க, சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடைபெற்ற பார்வையற்ற மகளிர் ரி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு இந்தியா 10.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து பார்வையற்ற பாகிஸ்தான் மகளிர் அணித் தலைவி நிம்ரா ரஃபீக் இந்தியாவின் பெரிய வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார், அதே நேரத்தில் பார்வையற்ற இந்திய மகளிர் அணித் தலைவி ரி.சி. தீபிகா, பாகிஸ்தான் சிறப்பாக விளையாடியதாகக் கூறினார்.
பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் அணிகள் களம் இறங்கும்போது ஒவ்வொரு அணியிலும் முழுமையான பார்வையற்ற நான்கு வீராங்கனைகள் இடம்பெறுவர். மற்றைய ஏழு வீராங்கனைகள் குறைபார்வை உடையவர்களாவர்.