இலங்கையில் அதிகரித்து வரும் பாதுகாப்பு கவலைகள், இறுக்கமான நுழைவு விதிகள் மற்றும் அரசியல் அமைதியின்மை அச்சுறுத்தல் காரணமாக ஜேர்மனி , தன் நாட்டு மக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கான பயண ஆலோசனைகளை ஜேர்மனி புதுப்பித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி இலங்கை, கனடா, பிரான்ஸ், மொராக்கோ, டென்மார்க் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கே பயண ஆலோசனை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டங்கள் முதல் மொராக்கோவின் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் வரை, ஜேர்மனின் புதுப்பிக்கப்பட்ட ஆலோசனை உலகளாவிய பயணத்தின் வளர்ந்து வரும் சிக்கலான தன்மையை எடுத்துக்காட்டுகிறது.
இந்நிலையில், இலங்கை தொடர்பில் ஜேர்மனி புதுப்பித்துள்ள பயண எச்சரிக்கை, பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சுட்டிக்காட்டியுள்ளது. அவற்றில், 2022 ஆம் ஆண்டு தேசிய அளவில் திவால்நிலை ஏற்பட்டதிலிருந்து இலங்கை தொடர்ச்சியான சவால்களைச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கணிசமாக பலப்படுத்தப்பட்டிருந்தாலும், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் உள்நாட்டு அரசியல் போராட்டங்கள் இன்னும் அதிகரித்து வருவதால், நிலைமை நிலையற்றதாகவே உள்ளது என ஜேர்மனி தெரிவித்துள்ளது.