இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்வதற்கு சுவிற்ஸர்லாந்து அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவேண்டும் எனவும் சுவிற்ஸர்லாந்து சமூக ஜனநாயகக் கட்சி அதன் மாநாட்டில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் அரச சார்பற்ற அமைப்பான ‘இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள்’ எனும் அமைப்பினால் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு தொடர்பில் கடந்த வருடம் வெளியிடப்பட்ட சட்ட அறிக்கையில் உள்ள விடயங்களை அடிப்படையாகக்கொண்டு வரையப்பட்டிருக்கும் மேற்படி தீர்மானத்தில் ‘ஈழத்தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட வன்முறைகள், படுகொலைகள், மிகமோசமான மனித உரிமை மீறல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை அத்தீர்மானத்தில் இலங்கையில் இடம்பெற்ற மீறல்களை ஐக்கிய நாடுகள் இனவழிப்புப் பிரகடனத்தின்படி இனவழிப்பாகக் கருதமுடியுமா என்பது பற்றி சர்வதேச கட்டமைப்புக்களின் ஒத்துழைப்புடன் ஆராயுமாறு சுவிற்ஸர்லாந்து அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பு, சுவிற்ஸர்லாந்தில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பு, மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படுவதை முன்னிறுத்தி பல தசாப்தகாலமாக அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் என்பவற்றை உள்வாங்கக்கூடியவகையில் மிகத்தெளிவான மனித உரிமைகள்சார் சுவிற்ஸர்லாந்து வெளிநாட்டுக்கொள்கை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கும் சுவிற்ஸர்லாந்து அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் எனவும் அதில் கோரப்பட்டுள்ளது.
மேலும் வருடாந்தம் மேமாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று நடைபெறும் நிகழ்வு உள்ளிட்ட நினைவுகூரல் நிகழ்வுகள் எவ்வித இடையூறுமின்றி முன்னெடுக்கப்படுவதற்கு இடமளிக்கப்படவேண்டும் எனவும், சுவிற்ஸர்லாந்தில் உள்ள தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பும், நீதியும் உறுதிப்படுத்தப்படும் வரை அவர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பியனுப்புவது தவிர்க்கப்படவேண்டும் எனவும் அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.