டுபாயில் நடைபெற்று வரும் 2026 உலக அரசாங்க உச்சி மாநாட்டின் (World Government Summit) ஒரு பகுதியாக, இலங்கையின் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவது குறித்த இருதரப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பில் இலங்கையின் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ கலாநிதி அஹமட் பெல்ஹூல் அல் ஃபலாசி (H.E. Dr. Ahmad Belhoul Al Falasi) உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் விளையாட்டு அமைச்சின் செயலாளர் கானெம் முபாரக் அல் ஹஜேரி, உதவிச் செயலாளர் ஷேக் சுஹைல் பின் புட்டி அல் மக்தூம் மற்றும் நிர்வாக சேவை நிபுணர் சயீத் பெடூர் அல் ஃபலாசி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கைப் பிரதிநிதிகள் குழுவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் அருஷா குரே, டுபாய் மற்றும் வடக்கு அமீரகத்திற்கான இலங்கைத் துணைத் தூதுவர் திரு. அலெக்ஸி குணசேகர மற்றும் அமைச்சின் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
கலந்துரையாடலின் முக்கிய அம்சங்கள்:
கட்டமைப்பு மேம்பாடு: இலங்கையின் விளையாட்டு மைதானங்கள் மற்றும் பயிற்சி மையங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒத்துழைப்பை பெறுதல்.
விளையாட்டு சுற்றுலா: சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை இலங்கையில் நடத்துவதன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்: கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றில் கையெழுத்திட இணக்கம் காணப்பட்டது.
பயிற்சி திட்டங்கள்: இரு நாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு இடையிலான அனுபவப் பகிர்வு திட்டங்களை ஆரம்பித்தல்.
இலங்கையின் விளையாட்டுத்துறையை உலகத் தரத்திற்கு உயர்த்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி ஒத்துழைப்பை வழங்க ஐக்கிய அரபு அமீரகம் இதன்போது சாதකமான பதிலை வழங்கியது.