13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் முறையே 59 ரன் வித்தியாசத்தில் இலங்கையையும், 88 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் அடுத்தடுத்து புரட்டியெடுத்தது. முந்தைய ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் போராடி வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் 252 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்காவை 81 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி (19.4 ஓவர்) நல்ல நிலையில் இருந்த இந்திய அணி அதன் பிறகு தனது பிடியை நழுவவிட்டது. இன்றைய ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாகும். இதில் தோல்வியை சந்தித்தால் நெருக்கடி மேலும் அதிகரிக்கும்.
இந்திய அணியில் பேட்டிங்கில் பிரதிகா ராவல், ரிச்சா கோஷ், ஹர்லீன் தியோல் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளனர். ஆனால் தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ் இன்னும் சோபிக்கவில்லை. அவர்கள் போதிய ரன் சேர்த்தால் சவாலான ஸ்கோரை எட்டலாம். பந்து வீச்சில் தீப்தி ஷர்மா, சினே ராணா, கிரந்தி கவுட் சிறப்பாக செயல்படுகிறார்கள். முதல் 3 ஆட்டங்களில் மிடில் வரிசையில் விக்கெட்டுகளை துரிதமாக இழந்தது பின்னடைவாக அமைந்தது. அந்த பலவீனத்தை இந்தியா சரி செய்தாக வேண்டும். அத்துடன் பீல்டிங்கிலும் ஏற்றம் காண வேண்டியது அவசியமாகும்.
7 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 89 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. அடுத்து நடக்க இருந்த இலங்கைக்கு எதிரான ஆட்டம் மழை காரணமாக ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. கடந்த ஆட்டத்தில் 107 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது.
அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக விளங்குகிறது. பேட்டிங்கில் பெத் மூனி, ஆஷ்லி கார்ட்னெர், கேப்டன் அலிசா ஹீலி, எலிஸ் பெர்ரியும், பந்து வீச்சில் அனபெல் சுதர்லாண்ட், கிம் கார்த், அலனா கிங், மேகன் ஸ்கட்டும் மிரட்டுகிறார்கள்.
நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி தனது ஆதிக்கத்தை தொடரும் ஆவலுடன் உள்ளது. அதே நேரத்தில் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை பதம் பார்த்த இந்திய அணியினர் அந்த நம்பிக்கையுடன் அவர்களை எதிர்கொள்ள ஆயத்தமாகிறார்கள். ஆனால் அசுர பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எல்லா வகையிலும் உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணியால் சாதிக்க முடியும். இல்லாவிட்டால் திண்டாட்டம் தான்.
இவ்விரு அணிகளும் இதுவரை 59 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 48 ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும், 11 ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.
இந்தியா: பிரதிகா ராவல், ஸ்மிர்தி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர், ரிச்சா கோஷ், சினே ராணா, கிரந்தி கவுட், ஸ்ரீ சரனி.
ஆஸ்திரேலியா: அலிசா ஹீலி (கேப்டன்), போபி லிட்ச்பீல்டு, எலிஸ் பெர்ரி, பெத் மூனி, அனபெல் சுதர்லாண்ட், ஆஷ்லி கார்ட்னெர், தாலியா மெக்ராத், ஜார்ஜியா வேர்ஹாம் அல்லது சோபி மொலினிக்ஸ், கிம் கார்த், அலனா கிங், மேகன் ஸ்கட்.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.