தமிழகத்தில் 1967-க்குப் பிறகு ஆட்சி அதிகாரத்துக்கு வரமுடியாத காங்கிரஸ் கட்சி, இந்த முறை எப்படியாவது ஆட்சியில் பங்கு பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் இறங்கியுள்ளது.
கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என விஜய் தலைமையிலான தவெக போட்ட தூண்டிலில் சிக்கி, வரும் பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியா, தவெகவுடன் கூட்டணியா என்பதில் தொடர்ந்து காங்கிரஸ் குழப்பத்தில் இருந்து வருகிறது.
2019, 2021, 2024 பொதுத் தேர்தல்களில் நிலையாக இருந்த திமுக – காங்கிரஸ் கூட்டணி இப்போது ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. ராகுல் காந்திக்கு நெருக்கமான கிரிஷ் ஷோடங்கர், பிரவீண் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, விஜய் வசந்த், கிள்ளியூர் எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் சட்டப்பேரவைத் தேர்தல் வாய்ப்பை பயன்படுத்தி காங்கிரûஸ வலுப்படுத்த வேண்டும் என்று கருதுவதன் காரணம், திமுக அதிக இடங்களையும், ஆட்சியில் பங்கும் தர முன்வராவிட்டால், தவெகவுடன் கூட்டணி அமைத்து அதிக இடங்களைப் பெற்று ஆட்சியில் பங்கேற்கலாம் என்பதுதான்.
திமுகவில் 40 தொகுதிகளையோ அல்லது தவெகவில் 75 தொகுதிகளையோ பெற்றுவிட்டால், இப்போது இருப்பதைவிட அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவதுடன், குறைந்தது 10 சதவீத வாக்கு வங்கியை காங்கிரஸால் நிரூபிக்க முடியும். இதன்மூலம் 2029 – ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக அல்லது தவெகவிடம் பேரம் பேசி இப்போதுள்ள 10 எம்.பி.க்கள் எண்ணிக்கையை 20-ஆக உயர்த்தலாம் என்பது காங்கிரஸ் தலைமையின் கணக்கு.
அதேவேளை, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், சு.திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, விஷ்ணுபிரசாத் எம்பி. போன்றவர்கள் திமுக கூட்டணியில் தொடர்வதே சிறந்தது, வெற்றிவாய்ப்பு அதிகம் என காங்கிரஸ் தலைமைக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இன்னொருபுறம், தவெகவை காட்டித் தங்களது பேர வலிமையைக் கூட்ட வேண்டும் என்ற எண்ணம் காங்கிரஸுக்கு அதிகரித்துள்ளது.
“”நடிகர் விஜய்க்கு கேரளத்தில் மிகப் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அது மட்டுமல்ல, தமிழக எல்லையை ஒட்டிய கேரள சட்டப்பேரவைத் தொகுதிகளில் விஜய்யுடனான கூட்டணி மிகப்பெரிய அளவில் உதவக் கூடும். கடந்த இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியிடம் தோல்வியைத் தழுவிய நிலையில், இந்த முறை எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் கேரளத்தில் காங்கிரஸ் தலைமையில் அமைந்த ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு உண்டு. அதற்கு நடிகர் விஜய்யின் ஆதரவு உதவியாக இருக்கும்” என்பது கேரள காங்கிரஸாரின் கருத்து.
காங்கிரஸின் மத்திய தலைமையில் இன்னொரு கருத்தும் நிலவுகிறது. என்னதான் திமுகவுடன் கூட்டணி அமைத்துத் தமிழகத்தில் வெற்றி பெற்றாலும், அமைய இருக்கும் ஆட்சி திமுக ஆட்சியாக இருக்குமே தவிர, காங்கிரஸ் ஆட்சியாகவோ, காங்கிரஸ் இடம்பெறும் கூட்டணி ஆட்சியாகவோ இருக்கப் போவதில்லை. அதே நேரத்தில் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால், கூடுதல் இடங்களில் போட்டியிடுவது மட்டுமல்லாமல் அதிக இடங்களிலும் வெற்றி பெற முடியும்.
தாங்கள் கேட்கும் தொகுதிகளை விட்டுத்தர தவெக தயாராக இருக்கும். திமுக வெற்றி பெறும் தொகுதிகளைத் தனக்குத் தக்க வைத்துக் கொள்ளுமே தவிர தங்களுக்கு விட்டுத் தராது என்று காங்கிரஸ் எம்பிக்கள் சிலர் ராகுல் காந்தியிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி அமைவதைவிடக் கேரளத்தில் தங்கள் தலைமையில் ஆட்சி அமைவதை காங்கிரஸார் விரும்புவதில் வியப்பில்லை. இந்தத் துருப்புச் சீட்டை பயன்படுத்திதான் ராகுல் காந்தியின் மனதில் தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்த சிந்தனையைக் காங்கிரஸார் விதைத்திருக்கிறார்கள். கிறிஸ்தவ அமைப்புகளின் மூலம் சோனியா காந்தியிடமும், “காங்கிரஸ் ஆட்சி’ ஆசை காட்டி ராகுல் காந்தியிடமும் தவெகவுடனான கூட்டணிக்கு ஆதரவு தேட முற்பட்டிருக்கின்றனர்.
தனக்கு எம்ஜிஆர் போன்ற ஆதரவு இருக்கிறது என்கிற நடிகர் விஜய்யின் எண்ணமும், தனித்துப் போட்டியிட்டு தமிழக முதல்வராகிவிடலாம் என்கிற கனவும் படிப்படியாக குறைந்து வருகிறது.
கரூர் சம்பவத்துக்குப் பிறகு தனித்து இயங்க முடியாது; தனக்கு அரசியல ரீதியாக ஆதரவு வேண்டும் என்பதை நடிகர் விஜய் உணரத் தொடங்கி இருக்கிறார். தவெகவுடன் கைகோக்கத் தயாராக இருந்த அதிமுகவின் நேசக்கரத்தை, ஆரம்பம் முதலே தான்தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறி நிராகரித்துவிட்டார் விஜய். செங்கோட்டையனை இணைத்துக் கொண்ட பிறகு அதற்கான வாய்ப்பு முற்றிலுமாக இல்லாமல் போய்விட்டது.
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் வலிமையான கூட்டணியை உறுதி செய்துகொண்டுவிட்ட நிலையில், இனிமேல் நடிகர் விஜய்யே விரும்பினாலும்கூட அந்தக் கூட்டணியை முறித்துக்கொள்ள தயாராக மாட்டார் என்பது உறுதி.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய்யை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பிய பாஜகவை கடுமையாக விமர்சித்து தனது சிறுபான்மையினர் ஆதரவை தக்க வைத்துக்கொள்ள விஜய் விரும்புவதால் பாஜகவுடனான உறவு சாத்தியமில்லை. ஜனநாயகன் தணிக்கை விவகாரத்துக்குப் பிறகு அதற்கான வாய்ப்பு முற்றிலுமாக அடைக்கப்பட்டு விட்டது.