ஐக்கிய அரபு இராச்சியத்தில் வெள்ளிக்கிழமை (12) ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த சுழல்பந்துவீச்சாளர் விக்னேஸ்வரன் ஆகாஷ், வேகப்பந்துவீச்சாளர் குகதாஸ் மாதுளன், ஆகிய இருவர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
19 வயதுக்குட்பட்ட மேற்கிற்தியத் தீவுகளுக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் – செப்டெம்பர் மாதங்களில் நடைபெற்ற 7 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 7 போட்டிகளிலும் விளையாடி 9.10 என்ற சராசரியுடனும் 3.26 என்ற கட்டுப்பாடான பந்துவீச்சுடனும் விக்னேஸ்வரன் ஆகாஷ் 20 விக்கெட்களைக் கைப்பற்றி தனது பந்துவீச்சு ஆற்றலை வெளிப்படுத்தி இருந்தார்.
அந்தத் தொடரில் இரண்டு அணிகளையும் சேர்ந்த வேறு எவரும் 10 விக்கெட்களை எட்டவில்லை.
இரண்டாவது அதிகூடிய 9 விக்கெட்களை இலங்கையைச் சேர்ந்த செத்மிக்க செனவிரட்ன வீழ்த்தியிருந்தார்.
யாழ். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் சுழல்பந்துவீச்சாளரான ஆகாஷ், 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணத்திலும் சிறப்பாக பந்துவீசுவார் என நம்பப்படுகிறது.
குகதாஸ் மாதுளன் இரண்டு போட்டிகளில் மாத்திரம் விளையாடி 3 விக்கெடகளைக் கைப்பற்றினார்.
யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் வேகப்பந்துவீச்சாளரான குகதாஸ் மாதுளனுக்கு இந்தத் தொடரில் கூடுதல் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக றோயல் கல்லூரி வீரர் விமத் தின்சாரவும் உப தலைவராக கிங்ஸ்வூட் வீரர் கவிஜ கமகேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியில் இடம்பெற்ற ரமிரு பேரேரா, புலிஷ குணதிலக்க, சேனுஜ வேக்குனகொட, ஜேசன் பெர்னாண்டோ ஆகிய நால்வரும் ஆசிய கிண்ணத்துக்கான 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியில் இடம்பெறவில்லை.
அவர்களுக்கு பதிலாக சமரிந்து நெத்சர, துல்னித் சிகேரா, கித்ம விதானபத்திரன ஆகியோர் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இளம் வீரர்களைத் தயார் படுத்தும் களமாக 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் அமையவுள்ளது.