ஜனாதிபதியை விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலச்சட்ட விதிகள் பிரயோகிக்கப்படும் என்ற பிரதியமைச்சர் சுனில் வட்டகலவின் கருத்து தொடர்பில் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச ஊடகவியலாளர்கள் பேரவை, தற்போதைய நெருக்கடி நிலைக்கு மத்தியில் உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கும், கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் பொதுமக்கள் கொண்டிருக்கும் சுதந்திரத்தை அரசாங்கம் பாதுகாக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இலங்கை மிகமோசமான இயற்கைப் பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், ஜனாதிபதியை விமர்சிக்கும் நபர்களுக்கு எதிராக அவசரகாலச்சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பிரயோகிக்குமாறு பிரதியமைச்சர் சுனில் வட்டகல பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்துக் கண்டனத்தை வெளிப்படுத்தியும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்துடன் இணைந்து சர்வதேச ஊடகவியலாளர்கள் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகலவுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின்போது, குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் சிலரால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவையும், சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரையும் இலக்குவைத்து சமூகவலைத்தளங்களில் மிகமோசமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.
அதுமாத்திரமன்றி இவ்வாறான நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில் இலங்கை அரசாங்கத்தினால் பொதுமக்கள் பாதுகாப்புச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், அச்சட்டத்தின் 5 ஆம் சரத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள அவசரகால அதிகாரங்கள் நெருக்கடி நிலையின்போது பகிரப்படும் தகவல்களைக் கட்டுப்படுத்துவதற்கு இடமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதியமைச்சர் சுனில் வட்டகல இவ்வாறு கூறினாலும், அவசரகாலச்சட்டமானது விமர்சனங்களையோ அல்லது கருத்துக்களையோ ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படமாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் அமைச்சர் சுனில் வட்டகலவின் கருத்தானது அனர்த்த முகாமைத்துவம் எனும் போர்வையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியாகும்.
நாட்டில் நெருக்கடி நிலவும் வேளையில் உரிய நேரத்தில் சரியானதும், நம்பகத்தன்மை வாய்ந்ததுமான செய்திகளை வழங்கவேண்டிய மிகப்பாரிய பொறுப்பு ஊடங்களுக்கு உண்டு.
அதேபோன்று உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கும், கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் பொதுமக்கள் கொண்டிருக்கும் சுதந்திரத்துக்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.