அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் ஊழல் காரணமாக மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்கி செஸ் வரியை நீக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் உள்நாட்டுத் தொழில்முனைவோரை முற்றாக அழித்துவிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா எச்சரித்துள்ளார்.
நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் இணக்கப்பாடு தொடர்பில் தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள காணொளியிலேயே அவர் இவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 600 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது. இது ஒரு சிறந்த விடயம் என்றாலும், இந்த உடன்படிக்கையின் பின்னணியில் உள்ள சில உண்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவாவிடமிருந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளே மிக முக்கியமானவையாகும்.
அந்தக் கடிதத்தின்படி, எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அனைத்து மானியங்களையும் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் அல்லது ஒப்புக்கொள்ளப்பட்ட 100 பில்லியன் ரூபாய் முடிவடைவதற்குள் முழுமையாக இரத்து செய்வதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளது என்றார்.