அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தியுள்ளதாகக் கெடு முடிவடைவதற்கு முன்னதாகப் பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கனடியப் பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது.
“அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்த நான் முடிவெடுத்துள்ளேன். மேலும் கனடாவின் பேச்சுவார்த்தையாளர்களை ஒட்டாவாவிற்குத் திரும்புமாறு உத்தரவிட்டுள்ளேன். கடைசி நிமிடம் வரை இந்த பேச்சுவார்த்தைகள் முழுவதிலும் கனடியர்களின் நலன்களைப் பாதுகாக்க அவர்கள் நேர்மையுடன் தீவிரமாக உழைத்துள்ளனர்” என்று பிரதமர் அலுவலகம் (PMO) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இருப்பினும், அமெரிக்கா முன்மொழிந்த விதிமுறைகளில் கடைசி நிமிடத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் நியாயமற்றதாகவும், பொருளாதார ரீதியாகப் பொருத்தமற்றதாகவும் இருந்ததுடன், எந்தவொரு ஒப்பந்தத்தின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியது”.
“இன்று நள்ளிரவு முதல், தோராயமாக $28 பில்லியன் மதிப்பிலான கனடியப் பொருட்கள் மீது 50% வரியை விதிக்க அமெரிக்கா உத்தேசித்துள்ளது” என்று அந்த அறிக்கை கூறியது.
“நமது தொழிலாளர்களையும் வணிகங்களையும் பாதுகாப்பதற்காக கனடா அந்த வரிகளுக்கு நிகராக டாலருக்கு டாலர் பழிவாங்கும் நடவடிக்கையாக வரி விதிக்கும்”.