அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையை திரித்து வெளியிட்டதாக எழுந்த விவகாரத்தில் பிபிசி டைரக்டர் ஜெனரல் டிம் டேவி, செய்திப்பிரிவு தலைவர் டெபோரா டர்னஸ் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி ஆற்றிய உரை, கேபிடல் ஹில் கலவரத்தை தூண்டும் விதமாக இருந்தது என்று, பிரபல செய்தி நிறுவனமான பிபிசி, ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது.
இந்த ஆவணப்படத்தில், டிரம்ப் பேசிய இரண்டு தனித்தனி வீடியோக்கள், எடிட் செய்யப்பட்டு ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தன.ஒரே வீடியோ போன்று தோற்றம் அளிப்பது போல் இந்த ஆவணப்படம் இருந்தது.
இதன் மூலம் தன் உரையை திரித்து வெளியிட்டதாக டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிபிசிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது போலியான செய்தி என்றும் குற்றம் சாட்டினர். இது பற்றி விசாரணைக்கு பிபிசி நிறுவனம் உத்தரவிட்டது.
முன்னாள் ஆலோசகரான மைக்கேல் பிரெஸ்காட் தலைமையிலான பிபிசியின் ஆசிரியர் வழிகாட்டுதல் குழு தொகுத்த 19 பக்க உள்தகவல் அறிக்கையில், டிரம்ப் கலவரத்தை தூண்டியது போன்ற பிம்பத்தை ஆவணப்படம் உருவாக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது பிபிசிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.